நாளை மதியம் விவசாயிகளுடன் 9-வது கட்ட பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தோமர்


நாளை மதியம் விவசாயிகளுடன் 9-வது கட்ட பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தோமர்
x
தினத்தந்தி 14 Jan 2021 1:14 PM GMT (Updated: 14 Jan 2021 1:14 PM GMT)

விவசாயிகளுடன் நாளை மதியம் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில  விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 8 முறை மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவிதமான உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்  இடைக்காலத் தடை விதித்தது. விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர். இந்த குழுவில் பூபிந்தர்சிங் பால், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. .  இந்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார்.

இதற்கிடையில்  9-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து நரேந்திர சிங் தோமர் கூறுகையில் ‘‘திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. நாளை மதியம் 12 மணிக்கு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் ஆரோக்கியமான  விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என கூறினார்.

Next Story