விவசாயிகள் டிராக்டர் பேரணி: எரிபொருள் நிரப்ப வேண்டாம் என உ.பி அரசு உத்தரவு? விவசாயிகள் மத்தியில் பரபரப்பு
டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி எல்லையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.
18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், டெல்லியில் வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன. டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், டிராக்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் காட்டு தீ போல் விவசாயிகளிடையே வேகமாக பரவியது. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த எரிபொருள் விநியோக அதிகாரிகள், கேன் மற்றும் வேளாண் இயந்திரங்களுக்கு டீசல் நிரப்ப வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது. இது விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுக்கும் நோக்கில் அரசு நிர்வாகம் கொண்டு வந்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த தகவல் அறிந்த மீரட்டை சேர்ந்த பெட்ரோல் பங்க் சங்க உரிமையாளர்கள் அது மாதிரியான உத்தரவுகள் அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு எதுவும் வரவில்லை என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story