லடாக்கை தொடர்ந்து சிக்கிம் எல்லையிலும் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி; இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


லடாக்கை தொடர்ந்து சிக்கிம் எல்லையிலும் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி; இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Jan 2021 11:01 PM GMT (Updated: 2021-01-26T04:31:07+05:30)

லடாக்கை தொடர்ந்து சிக்கிம் எல்லையிலும் சீன ராணுவம் ஊடுருவ முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

லடாக்கில் பதற்றம்
கிழக்கு லடாக்கில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் ஜூன் மாதம் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும் நிகழ்ந்தன.

உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் எல்லையில் தொற்றிக்கொண்ட பதற்றம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு தரப்பிலும் சுமார் தலா 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சண்டை வெடித்தது
லடாக்கில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் முடிவுக்கு வருவதற்குள், சீன ராணுவம் சிக்கிமிலும் தனது ஆக்கிரமிப்பு மனநிலையை வெளிப்படுத்தி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

வடக்கு சிக்கிமின் நாகு லா எல்லைப்பகுதியில் கடந்த 20-ந்தேதி, சீன வீரர்கள் அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்டுபிடித்த இந்திய வீரர்கள், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராணுவம் விளக்கம்
இதுகுறித்து இந்திய ராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வடக்கு சிக்கிமின் நாகு லா பகுதியில் கடந்த 20-ந்தேதி இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டது. உடனடியாக இரு தரப்பு அதிகாரிகளும் அதில் தலையிட்டு, அங்கு வகுத்துள்ள நடைமுறையின்படி பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்தனர். எனவே இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடாமல் ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என கூறபட்டு இருந்தது.

கடந்த மே மாதம் கிழக்கு லடாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, சிக்கிமின் இந்த நாகு லா எல்லைப்பகுதியிலும் இரு தரப்பும் நேருக்குநேர் மோதலில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டறிக்கை வெளியீடு
இதற்கிடையே லடாக்கில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நீடித்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து நேற்று இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டன.

அதில், ‘இந்திய-சீன எல்லையின் மேற்கு செக்டார் அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் விரைவில் படைகளை விலக்கவும், இரு தரப்பும் இணைந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணவும், முன்கள வீரர்களை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவும், நிலைமையை கட்டுக்குள் வைக்கவும் பயனுள்ள முயற்சிகளை மேற்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும் இருநாட்டு தலைவர்களால் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகளை பின்பற்றவும், பேச்சுவார்த்தை முடிவுகளை செயல்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story