ஜன. 29 முதல் மும்பையில் அனைத்து புறநகர் ரெயில்களும் இயக்கப்படும் : மேற்கு ரெயில்வே அறிவிப்பு


ஜன. 29 முதல் மும்பையில் அனைத்து புறநகர் ரெயில்களும் இயக்கப்படும் : மேற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Jan 2021 7:35 PM GMT (Updated: 26 Jan 2021 7:35 PM GMT)

வரும் 29 ஆம் தேதி முதல் மும்பையில் அனைத்து புறநகர் ரெயில்களும் இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மும்பை,

மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. நிலைமை சற்று சீரானதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் மும்பையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் பொதுமக்கள் பயணம் செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது மின்சார ரெயில்களில் பெண்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்களை மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதித்தால் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து விடும் என மாநில அரசு அஞ்சுகிறது. எனவே பொதுமக்களுக்கு மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். முதல்-மந்திரியின் இந்த அறிவிப்பை அடுத்து மும்பையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நி்லையில் வரும் 29 ஆம்  தேதி முதல்  மும்பையில் அனைத்து புறநகர் ரெயில்களும்  இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 1,367- புற நகர் ரெயில்களும் இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,210- புற நகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 9 லட்சம் பயணிகள் இந்த ரெயில்களில் பயணிக்கின்றனர்.  


Next Story