டிராக்டர் பேரணியில் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


டிராக்டர் பேரணியில் வன்முறை: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 3 Feb 2021 9:46 PM GMT (Updated: 3 Feb 2021 9:46 PM GMT)

டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் நடந்தது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க கோரி ராஜஸ்தானை சேர்ந்த வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது வக்கீல் விஷால் திவாரி ஆஜராகி, ‘குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ‘இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டம் தன் கடமையை செய்யும் என பிரதமர் கூறியுள்ளார்’ என்றார்.

இதற்கு வக்கீல் விஷால் திவாரி, ‘விசாரணை ஒரு தரப்பாக மட்டும் இருக்கக்கூடாது. இரு தரப்பிலும் கருத்துகளை கேட்க வேண்டும்’ என வாதிட்டார்.

மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ‘ஒரு தரப்பு மட்டும் விசாரிக்கப்படும் என கருதுகிறீர்களா? விசாரணை என்றால் இரு தரப்பிடமும் நிச்சயம் நடைபெறும்’ என்றார்.

இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிடவும் அறிவுறுத்தினர்.

இதே விவகாரம் தொடர்பாக எம்.எல்.சர்மா, சஞ்சீவ் நேவர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

Next Story