விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; வேளாண் துறை அமைச்சர்


விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; வேளாண் துறை அமைச்சர்
x
தினத்தந்தி 5 Feb 2021 8:27 PM GMT (Updated: 5 Feb 2021 8:27 PM GMT)

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று 3-வது நாளாக விவாதம் நடைபெற்றது.

விவாதத்துக்கிடையே, மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் குறுக்கி்ட்டு பேசினார். அவர் கூறுகையில், விவசாய மண்டிகள் முறை தொடரும். குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் விளைபொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும். இதை கருப்பு சட்டங்கள் என்று எதிர்க்கட்சிகள் வர்ணிக்கின்றன. அப்படி கருப்பாக என்ன இருக்கிறது என்று சொன்னால், அதை சரி செய்யலாம் என்று நானும் 2 மாதங்களாக கேட்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகளோ, விவசாய சங்கங்களோ எதுவும் சொல்ல முன்வரவில்லை.

விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத்தான் வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியது. அதற்காக அந்த சட்டங்களில் குறை இருப்பதாக அர்த்தம் அல்ல. விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் ஒரு குறை கூட சொல்ல முடியவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக வேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு. விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது”என்றார்.

வேளாண் சட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை விவசாயிகள் - மத்திய அரசு இடையே 11-கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story