கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் - அமித்ஷா


படம்:  @AmitShah/ Twitter
x
படம்: @AmitShah/ Twitter
தினத்தந்தி 11 Feb 2021 4:38 PM GMT (Updated: 11 Feb 2021 4:38 PM GMT)

மேற்குவங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

தாகூர்நகர்

தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்குவங்கத்தில் பா.ஜனதா மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு இங்கு கிடைத்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அக்கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் தாக்கூர் நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசும் போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், தனிப்பட்ட வகையில் இங்கு மீண்டும் வந்து குழப்பங்களை தீர்த்து வைப்பேன் . இது இந்திய முஸ்லீம்களுக்கு எதிரானது என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. முஸ்லீம்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை . சிஏஏ குறித்து இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்படத்தேவையில்லை .

நாங்கள் ஒரு தவறான வாக்குறுதியை அளித்ததாக மம்தா  கூறினார். அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்க்கத் தொடங்கினார், அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பாஜக எப்போதும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்தோம், அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும்என கூறினார்.

Next Story