வரலாற்றில் முதல் முறையாக, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Feb 2021 11:53 AM GMT (Updated: 17 Feb 2021 11:53 AM GMT)

வரலாற்றில் முதல் முறையாக, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது.

புதுடெல்லி, 

பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் விதிக்கிறது. இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக எரிபொருள் விகிதங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்திய வரலாற்றில் முதல் முறையாக ராஜஸ்தானில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி உள்ளது. 

இதன்படி ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 25 பைசா அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் ரூ.93.16 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கங்கா நகரில் பிராண்டட் பெட்ரோல் ரூ.102.91க்கும், டீசல் 95.79க்கும் விற்பனையாகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.90 ஆக இருப்பதால், அடுத்த சில நாட்களில் ரூ.100-ஐக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.89.54 ஆகவும், டீசல் ரூ.79.95 ஆகவும் விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96க்கும், டீசல் லிட்டர் ரூ.86.98க்கும் விற்பனையாகிறது.

2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.19.95 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.66 பைசாவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story