மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் -ராகுல் காந்தி மீனவர்களிடையே பேச்சு


மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் -ராகுல் காந்தி மீனவர்களிடையே பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2021 12:30 PM GMT (Updated: 17 Feb 2021 12:30 PM GMT)

ஏழை மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் அனைத்துக்கும் தீர்வு என ராகுல் காந்தி மீனவர்களிடையே பேசினார்.

புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று  புதுச்சேரி  வருகை தந்தார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. மீனவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பற்றி நான் ஏன் பேசுகிறேன்? என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். 

நாம் பிரித்தாளப்படுகிறோம். ஏழை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இவை அனைத்துக்கும் தீர்வு. அதுவே முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். அரசியல்வாதிகள் வருவார்கள், பேசிவிட்டுச் செல்வார்கள். உங்கள் எண்ணத்தைக் கேட்கமாட்டார்கள். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்கவே வந்துள்ளேன். நான் பேச வரவில்லை. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மீண்டும் நான் வருவேன். 

அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன். அப்போதுதான் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும்.

தற்போதைய அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில் அனைத்து தொழில்களும் பெரிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எங்கள் பார்வை வேறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்த விரும்புகிறோம். ஏனெனில் அதுதான் இந்த நாட்டின் பலம் என கூறினார்.

Next Story