தேசிய செய்திகள்

புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு + "||" + The body of a woman was swept away in the floods in Pondicherry has been recovered

புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு

புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு
புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
புதுச்சேரி,

புதுச்சேரி சண்முகா புரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனாபேகம் (வயது 35). மீன் வியாபாரம் செய்து வந்தார்.

அந்த பகுதியில் உள்ள மக்கள், தங்களது வாகனங்களை அங்குள்ள ஓடை பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். ஹசீனா பேகமும் தனது ஸ்கூட்டரை நேற்று முன் தினம் இரவு அங்கு நிறுத்தி வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து வரத்தொடங்கியது. நேற்று காலை வெள்ளம் ஸ்கூட்டரை மூழ்கடித்துச் சென்றது. இதைப் பார்த்து ஹசீனா பேகம் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது ஸ்கூட்டரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக சென்றார்.

அப்போது வெள்ளம் அதிகமாக வந்ததால் நிலை தடுமாறிய ஹசீனாபேகம் ஓடையில் விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது.

இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கும், மேட்டுப்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஹசீனாபேகத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. 

தொடர்ந்து தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வந்தநிலையில், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டார். ரெட்டியார்பாளையம் அருகே உள்ள கனகன் ஏரியில் ஹசினா பேகம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.