மோடி அரசு தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்


மோடி அரசு தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 22 Feb 2021 9:38 AM GMT (Updated: 22 Feb 2021 9:38 AM GMT)

தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது என பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் விழிபிதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. 

டீசல் விலையும் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு உடனடியாக விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  நேற்று  பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதியிருந்தார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பெட்ரோல் நிலையங்களில் உங்கள் காருக்கு எரிபொருள் நிரப்பும்போது, அங்குள்ள மீட்டர் வேகமாக ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரவில்லை. வீழ்ச்சி அடைந்து வருகிறது.

ஆனால், பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஆக இங்கு அதிகரித்துள்ளது. சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது” எனக்கூறியுள்ளார்.


Next Story