தேசிய செய்திகள்

பெங்களூருவில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிரமாண்ட பேரணி + "||" + Private school teachers rally in Bangalore

பெங்களூருவில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிரமாண்ட பேரணி

பெங்களூருவில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிரமாண்ட பேரணி
30 சதவீத கட்டணத்தை குறைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெங்களூருவில் பிரமாண்ட பேரணி நடத்தினர்.
பெங்களூரு:

30 சதவீத கட்டணத்தை குறைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெங்களூருவில் பிரமாண்ட ேபரணி நடத்தினர். 

ஆன்லைன் வகுப்புகள் 

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தது. அதுபோல அரசு சார்பிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

மேலும் வித்யாகம திட்டத்தின் கீழ் அரசு சார்பில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி கர்நாடகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ளன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

30 சதவீத கட்டணம் குறைப்பு 

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்கள் ஆண்டுதோறும் செலுத்தும் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று கூறியது. ஆனால் இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது மாணவர்களின் பெற்றோர்கள் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இந்த சூழ்நிலையில் முழு கட்டணத்தையும் செலுத்த இயலாது. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு இருந்தது.

மேலும் தனியார் பள்ளிகள் 30 சதவீத கட்டணத்தை குறைக்க உத்தரவிட வேண்டும் என்று அரசிடம், பெற்றோர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி தனியார் பள்ளிகள் இந்த ஆண்டுக்கான கட்டணத்தில் 30 சதவீதத்தை குறைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.

பிரமாண்ட பேரணி

ஆனால் இதற்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கொரோனாவால் பள்ளிகளை திறக்க முடியாததால் தங்களிடம் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. ஏராளமானோரை வேலையை விட்டு நிறுத்தி விட்டோம். கட்டணத்திலும் தள்ளுபடி செய்தால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் அரசு வெளியிட்ட 30 சதவீத கட்டண குறைப்பு என்ற அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி பெங்களூருவில் ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு பெங்களூரு, மைசூரு, தாவணகெரே, மங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெங்களூரு கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையம் முன்பு கூடினர். பின்னர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆசிரியர்கள் சுதந்திர பூங்காவை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். அப்போது 30 சதவீத கட்டண குறைப்பு என்ற ஆணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு 

பின்னர் சுதந்திர பூங்காவை சென்றடைந்த ஆசிரியர்கள் அந்த வழியாக செல்லும் சாலையின் இருபுறமும் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராகவும், பள்ளி கல்வித் துைறை மந்திரி சுரேஷ்குமாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், நிர்வாகிகள் அரசு தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மேலும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தால் பெங்களூரு நகரமே நேற்று அதிர்ந்து போனது.