புதுவையில் ஆட்சி அமைக்க உரிமை கோரமாட்டோம்; புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ உறுதி


புதுவையில்  ஆட்சி அமைக்க உரிமை கோரமாட்டோம்; புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ உறுதி
x
தினத்தந்தி 24 Feb 2021 12:24 AM GMT (Updated: 24 Feb 2021 12:40 AM GMT)

புதுவையில் ஆட்சி அமைக்க உரிமை கோரமாட்டோம் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பு
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில், நாராயணசாமி உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்து மக்களிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க் களை கூட பேச அனுமதிக்கவில்லை. வாக்கெடுப்பு நடத்தும்போது, அதில் கலந்துகொள்ளாமல் புறமுதுகிட்டு வெளியே சென்றார்கள்.

ஆட்சி கவிழ்ந்த நிலையில் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகளை கொச்சைப்படுத்தும் வகையில் நாராயணசாமி பேசினார். வெளியில் வந்து சபாநாயகர் சட்டவிரோதமாக செயல்பட்டார் என்று குற்றஞ்சாட்டினார்.

ஆட்சி அமைக்க...
உண்மையிலேயே நாராயணசாமி தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விமர்சித்தபோது ஆட்சியைவிட்டு வெளியே வந்திருக்கவேண்டும். ஆனால் அவர்களது கட்சியை சேர்ந்த 7 பேர் விலகியபோதும் பெரும்பான்மை உள்ளது என்றார். காங்கிரஸ்-தி.மு.க.வினர் கட்சியில் உழைப்பவர்களுக்கு சீட் கொடுப்பதில்லை. அதற்காக இப்போது அவர்களது கட்சியை சேர்ந்தவர்களே பாடம் புகட்டி உள்ளார்கள்.

அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதில் எங்களுக்கு ஆசையில்லை. இப்போது ஆட்சி அமைக்கவும் நாங்கள் உரிமை கோரமாட்டோம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story