தமிழக நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு; சட்ட நிபுணர்களுடன் கர்நாடகம் ஆலோசனை; பெங்களூருவில் இன்று நடக்கிறது


கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி
x
கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி
தினத்தந்தி 26 Feb 2021 2:58 AM GMT (Updated: 26 Feb 2021 2:58 AM GMT)

கர்நாடகம்- தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை இருந்து வருகிறது.

நதிகள் இணைப்பு திட்டம்
இதற்கிடையே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தென் தமிழக மக்களுக்கு காவிரி உபரிநீரை வழங்கும் வகையில் நதிகள் இணைப்பு திட்ட பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி கிவைத்துள்ளார். இதற்கு கர்நாடக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.

இன்று உயர்மட்ட ஆலோசனை
இதற்கிடையே கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டம் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் போலீஸ் மற்றும் சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மையும் கலந்துகொள்ள உள்ளார். கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல், சுப்ரீம் கோர்ட்டில் வாதிட கர்நாடக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல்கள், அரசின் முதன்மை செயலாளர், நீர்ப்பாசன துறையின் முதன்மை செயலாளர், சட்ட நிபுணர்கள், நீர்ப்பாசனத்துறை மற்றும் சட்டத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

சட்ட போராட்டங்கள்
மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை, காவிரி உபரிநீரை பயன்படுத்தி தமிழ்நாடு புதிதாக தொடங்கி உள்ள நதிகள் இணைப்பு திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக காவிரி உபரிநீரை பயன்படுத்தி நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதால், அந்த திட்டத்திற்கு தடை விதிக்க எடுக்க வேண்டிய சட்ட போராட்டங்கள், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டுக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து சட்ட வல்லுநர்கள், அரசின் மூத்த வக்கீல்கள், மந்திரி பசவராஜ் பொம்மையுடன் 
ஆலோசித்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி முடிவு எடுக்க உள்ளார்.

மேகதாது அணை
இதுதவிர மகதாயி நதி நீர் பிரச்சினை, கிருஷ்ணா மேல்அணை கட்டும் திட்டம், மேகதாது அணைகட்டும் திட்டம் குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் மந்திரி ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story