குஜராத் உள்ளாட்சி தேர்தல்: 6,110 இடங்களில் பா.ஜ.க. வெற்றி; பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா நன்றி
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 8,474 இடங்களில் 6,110 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் ஜே.பி. நட்டா மக்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 231 தாலுகாக்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 28ந்தேதி நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. நகராட்சிகளில் 58.82 சதவீத வாக்குகளும், மாவட்ட பஞ்சாயத்துகளில் 65.80 சதவீத வாக்குகளும், தாலுகா பஞ்சாயத்துகளில் 66.60 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் வெளியான தகவலில், அனைத்து 31 மாவட்ட பஞ்சாயத்துகளிலும், பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 81 நகராட்சிகளில் 70ல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 231 தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரசை விட முன்னிலையில் உள்ளது.
மொத்தமுள்ள 8,474 இடங்களில் 6,110 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 3 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்தில் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து உள்ளது. ஒரு சில தாலுகா பஞ்சாயத்துகளிலேயே அக்கட்சி வெற்றி பெற முடிந்துள்ளது.
எனினும், கோத்ரா நாகர்பாலிகா நகராட்சியில் ஓவைசி தலைமையிலான கட்சி 8 இடங்களில் 6ல் வெற்றியடைந்து உள்ளது. பரூச் நாகர்பாலிகாவில் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நகார்பாலிகா, தாலுகா பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் குஜராத் முழுவதும் பா.ஜ.க.வின் வளர்ச்சி மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு உறுதுணையாக உள்ளது என தெளிவாக தெரிய வந்துள்ளது. பா.ஜ.க.வின் மீது நம்பிக்கை வைத்துள்ள மற்றும் அன்பு கொண்டுள்ள குஜராத் மக்களின் முன் நான் தலைவணங்குகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கட்சி மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்காக நன்றி தெரிவித்து கொண்டார். மாநில தலைவர் சி.ஆர். பாட்டீல், முதல் மந்திரி விஜய் ரூபானி மற்றும் கட்சி தொண்டர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
Related Tags :
Next Story