8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது


8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது
x
தினத்தந்தி 8 March 2021 9:39 PM GMT (Updated: 8 March 2021 9:39 PM GMT)

பொன்னம்பேட்டை தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து 8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது. மேலும் காப்பாற்ற முயன்ற அவனது தாத்தா படுகாயம் அடைந்தார். இதற்கிடையே கிராம மக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

குடகு:

பொன்னம்பேட்டை தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து 8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது. மேலும் காப்பாற்ற முயன்ற அவனது தாத்தா படுகாயம் அடைந்தார். இதற்கிடையே கிராம மக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

2 பேரை கொன்ற புலி

  குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா டி.செட்டிகேரி கிராமம் மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் டி.செட்டிகேரி கிராமம், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் புலி அட்டகாசம் அதிகமாக இருந்துவருகிறது. 

அதன்படி கடந்த மாதம் பொன்னம்பேட்டை தாலுகா செட்டிகேரி கிராமத்தைச் சேர்ந்த சென்னம்மா(வயது 60), ஸ்ரீமங்கலா குமட்டூரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளிமாணவன் அய்யப்பா(14) ஆகிய 2 பேரை புலி அடித்து கொன்றது. அதாவது அடுத்தடுத்து 2 நாட்களில் மூதாட்டி, பள்ளி மாணவனை புலியை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கும்கி யானைகள் உதவியுடன்...

  மேலும் 15-க்கும் மேற்பட்ட மாடுகளை கடித்து கொன்றது. இதைதொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும் ஆங்காங்கே இரும்பு கூண்டும், வலையும் விரித்து இருந்தனர். இதற்கிடையே ஒரு பெண் புலி வனத்துறையினர் விரித்த வலையில் சிக்கியது. ஆனாலும் அந்த புலி ஆட்கொல்லி புலி இல்லை என்பது தெரியவந்தது. இதனால் செட்டிகேரி, ஸ்ரீமங்கலா கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் அட்டகாசம் செய்து வருவது தெரியவந்தது.

  இதனால் கிராம மக்கள் பீதியடைந்தனர். மேலும் டி.செட்டிகேரி, ஸ்ரீமங்கலா கிராம மக்கள், விவசாய சங்கத்தினர் புலி, சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கும்கியானைகளை வரவழைத்து ஆட்கொல்லி புலியை பிடிக்க இரவு,பகல் பார்க்காமல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவனை கொன்றது

  இந்தநிலையில் பொன்னம்பேட்டை தாலுகா பெள்ளூரு கிராமத்தில் மேலும் ஒரு சிறுவனை, புலி அடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

  அதாவது பெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்சா(வயது 52). விவசாயி. இவரது பேரன் ரங்கசாமி(8). இந்தநிலையில் கென்சா, தனது பேரன் ரங்கசாமியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ேவலை செய்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து தோட்டத்திற்கு இரைதேடி புலி ஒன்று வந்து பதுங்கி இருந்துள்ளது. இதையடுத்து அந்த புலி, சிறுவன் ரங்கசாயை தாக்கியுள்ளது. அப்போது சிறுவன் கூச்சலிட்டுள்ளான்.

  இந்த சத்தத்தை கேட்டு அவனது தாத்தா கென்சா ஓடிவந்து பார்த்தார். அப்போது சிறுவன் ரங்கசாமியை, புலி தாக்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர், சிறுவனை புலியிடம் இருந்து காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் புலி தாக்கிவிட்டு வனப்பகுதியில் ஓடியது. இதில் புலி தாக்கிய ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சிறுவன் ரங்கசாமி உயிரிழந்தான். மேலும் அவனது தாத்தா கென்சா படுகாயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

  இதையறிந்த கிராம மக்கள் படுகாயம் அடைந்த கென்சாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மைசூரு ஆஸ்பத்திாிக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதுபற்றி தகவல் அறிந்த பொன்னம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் புலி அடித்து கொன்ற சிறுவன் ரங்கசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைதொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிராம மக்கள் சாலை மறியல்

  அப்போது தோட்டத்தில் பணியாற்றிய சிறுவனை அடித்துக்கொன்ற புலியை பிடிக்க வலியுறுத்தி ெபள்ளூரு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சாலை மறியலில் கலந்துகொண்டு வனத்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மனிதர்கள், கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை பிடிக்கும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

  முன்னதாக புலியை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளை பெள்ளூரு கிராமத்திற்கு வரவழைத்தனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கிராமமக்கள் யானையை ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

3-வது பலி

  பின்னர் அவர்களை போலீசார் சாமதானப்படுத்தினர். இதைதொடாந்து வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதனால் பொன்னம்பேட்டை தாலுகாவில் புலி தாக்கி 3 பேர் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story