கேரள சட்டசபை தேர்தல்: அதிருப்தியாளர்களால் 2 கூட்டணியிலும் கவலை


கேரள சட்டசபை தேர்தல்: அதிருப்தியாளர்களால் 2 கூட்டணியிலும் கவலை
x
தினத்தந்தி 10 March 2021 3:28 AM GMT (Updated: 10 March 2021 3:29 AM GMT)

கேரள சட்டசபை தேர்தலில், வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்குவதால் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கோழிக்கோடு, 

தமிழக சட்டசபை தேர்தலுடன், 140 இடங்களை கொண்டுள்ள கேரள சட்டசபைக்கும் அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியும், ஆட்சியை கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.

இவ்விரு அணிகளுக்கு எதிராக பா.ஜ.க.வும் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியிலும் சரி, காங்கிரஸ் கூட்டணியிலும் சரி அதிருப்தியாளர்களால் கவலை அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

உதாரணத்துக்கு, ஆளும் கூட்டணியில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொழிற்சங்க தலைவர் நந்தகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆர்ப்பாட்டமும் நடத்தி இருக்கின்றனர்.

அந்த தொகுதியில் உள்ளூரில் பிரபலமான நசருதீனுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று கருத்து நிலவுகிறது. இதற்கு மாறாக கட்சி தலைமை செயல்பட்டுள்ளதால் எராமங்கலம் உள்ளூர் கமிட்டி உறுப்பினர்கள் 4 பேர் பதவி விலகி உள்ளனர். இது மேலிடத்துக்கு கவலையை தந்துள்ளது.

இதே போன்று பாலக்காடு மாவட்டம், தரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மந்திரி ஏ.கே.பாலன் மனைவி ஜமீலாவை நிறுத்த உள்ளூர் தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு தலைமை பணிய நேரிட்டது.

கலமச்சேரியில் கே.ராஜீவை களம் இறக்கவும் எதிர்ப்பு. அவருக்கு பதிலாக தொழிற்சங்க தலைவர் கே.சந்திராபிள்ளையை நிறுத்த வேண்டும் என்று உள்ளூர் தொண்டர்கள் விரும்புகின்றனர். இப்படி ஆளும் கூட்டணியில் பிரச்சினைகள் தொடர் கதையாய் நீளுகின்றன.

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை. ஆனாலும் பிரசாரத்தில் உம்மன்சாண்டி முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பது ஒன்றும் புதிது இல்லை என்கிறார்கள், கேரளவாசிகள். அந்த கட்சியில் இந்த தேர்தலிலும் அதிருப்தி குரல் எழுந்துள்ளதாம்.

வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், இரு கூட்டணியிலும் அதிருப்தியாளர்கள் ஓங்கிக்குரல் கொடுக்கத்தொடங்கி உள்ளனர்.

இதனால் கூட்டணி தலைவர்கள் கவலைப்படுவதோடு, இது அவர்களுக்கு தலைவலியையும் தந்துள்ளது.

எல்லா கட்சிகளிலும் அதிருப்தி நிலவுவது சமூக ஊடக பதிவுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

கூட்டணிகளுக்குள் தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் மனக்கசப்புகள் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.

தேசியவாத காங்கிரசிலும் குழப்பம்

தேசியவாத காங்கிரசிலும் அதிருப்தியை பார்க்க முடிகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. சசீந்திரன், எலத்தூர் தொகுதியில் களம் காண கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் 8 முறை போட்டியிட்டு வென்றிருக்கிறார், தற்போதைய இடதுசாரி அரசில் மந்திரியாக இருக்கிறார், மறுபடியும் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதா, இது ஆரோக்கியம் இல்லையே என்ற குரல் எழுந்து இருக்கிறது.

இப்படியாக கேரள தேர்தல் களத்தில், கூட்டணிகளில் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் அதிருப்தியாளர்களால் தலைவர்களுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

Next Story