தடுப்பூசி போட தகுதியற்றவர் பட்டியலை உருவாக்க வேண்டும்: டெல்லி முதல் மந்திரி


தடுப்பூசி போட தகுதியற்றவர் பட்டியலை உருவாக்க வேண்டும்:  டெல்லி முதல் மந்திரி
x
தினத்தந்தி 18 March 2021 12:38 PM GMT (Updated: 18 March 2021 12:38 PM GMT)

கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களுக்கு பதில், தகுதியற்றவர்கள் பட்டியலை உருவாக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள் அவர்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நான் ஒவ்வொருவரையும் கேட்டு கொள்கிறேன்.

டெல்லியில், நாளொன்றுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இந்த எண்ணிக்கை 1.25 லட்சம் என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும்.  அடுத்த சில நாட்களில் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிப்போம்.

டெல்லியில் உள்ள 500 கொரோனா தடுப்பூசி மையங்களை ஆயிரம் என்ற இரட்டிப்பு எண்ணிக்கைக்கு உயர்த்துவோம்.  அரசு மையங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  இதனை காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரையாக மாற்றுவோம்.  இதனால், கூடுதல் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் சூழல் உருவாகும்.

கடந்த சில வாரங்களாக, பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.  எனினும், தேடுதல், கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதலை கடுமையாக அமல்படுத்துவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.  கண்காணிப்பு கடுமையாக்கப்படும்.  முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக உறுதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி மையங்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளில் சில தளர்வுகளை அறிவிக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் கடிதம் எழுதியுள்ளோம்.  கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களின் பட்டியலுக்கு பதில், தகுதியற்றவர்கள் யார் என்ற பட்டியலை உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Next Story