மராட்டியத்தில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்துங்கள் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு


மராட்டியத்தில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்துங்கள் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2021 12:01 AM GMT (Updated: 19 March 2021 12:01 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்துங்கள் என்றுஅதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பலமடங்குவீரியத்துடன் வேகமாக பரவி வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 179 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று ராக்கெட் வேகம் எடுத்து மாநிலத்தில் புதிதாக 25 ஆயிரத்து 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மராட்டியத்தில் கடந்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அது முதல் இதுநாள் வரையில் ஏற்பட்ட தொற்று பாதிப்பில் இதுவே அதிகபட்சமாகும்.

இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மண்டல கமிஷனர்களுடன் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். 

அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நெறிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்தவேண்டும். நோய் பாதித்தவர்களை கண்டறியும் நடைமுறைகளின் வேகத்தையும் அதிகப்படுத்துங்கள். தினமும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி மருந்துகளை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.

மேலும் 134 தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளதாக கூறிய அவர், அதிகரித்து வரும் வெப்பத்தை கருத்தில் கொண்டு தடுப்பூசி மையங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக நாந்தெட் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

Next Story