முக கவசம் அணியாத வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்


முக கவசம் அணியாத வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 19 March 2021 12:39 AM GMT (Updated: 19 March 2021 12:39 AM GMT)

முக கவசம் அணியாமல் பிரசாரம் செய்யும் வேட்பாளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் பிரசாரம் செய்ய தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து டாக்டர் விக்ரம்சிங் என்பவர் டெல்லி ஐகோா்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுடெல்லி, 

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் கமிஷன் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன், தேர்தல் தொடர்பான பணியின்போது ஒவ்வொருவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என்று தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது-

ஆனால், எண்ணற்ற வேட்பாளர்களும், அவர்களுக்கு ஓட்டு கேட்கும் தலைவர்களும், பேச்சாளர்களும் முக கவசம் அணியாமல் பிரசாரம் செய்து வருவதை டி.வி.களிலும், பத்திரிகைகளிலும் காண முடிகிறது. இதை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களே படம் பிடித்து வெளியிடுகிறார்கள்.

இந்த தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் செல்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த கூட்டங்களில் கொரோனா தொற்று உறுதியான ஒருவர் இருந்தால் கூட அவர் மூலம் ஏராளமானோருக்கு பரவி விடும்.

வாழ்வதற்கான அடிப்படை உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால், முக கவசம் அணியாத தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களால் இந்த உரிமை பாதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களை மட்டுமின்றி மற்றவர்களையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.

ஆகவே, முக கவசம் அணியாமல் திரும்ப திரும்ப பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களையும், தலைவர்களையும் பிரசாரம் செய்வதற்கு நிரந்தரமாகவோ அல்லது நீண்ட காலத்துக்கோ தடை விதிக்க தேர்தல் கமிஷனுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கை எடுத்தால்தான் கட்டாயம் முக கவசம் அணிவதை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story