சரக்கு வாகனம்- கார் நேருக்குநேர் மோதல்; தம்பதி உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு


சரக்கு வாகனம்- கார் நேருக்குநேர் மோதல்; தம்பதி உள்பட 3 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 22 March 2021 10:03 PM GMT (Updated: 22 March 2021 10:03 PM GMT)

இரியூர் அருகே சரக்கு வாகனம்- கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் உடல் நசுங்கி செத்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சித்ரதுர்கா:

இரியூர் அருகே சரக்கு வாகனம்- கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் உடல் நசுங்கி செத்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

3 பேர் பலி

  சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஜவகொண்டஹள்ளி அருகே புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று காலை சரக்கு வாகனமும், காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதியும், சரக்கு வாகனத்தில் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது.

  இந்த விபத்தில் காரில் இருந்த ஒரு ஆண், பெண் மற்றும் சரக்கு வாகன டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இருவர் படுகாயம்

  இந்த விபத்தை பார்த்ததும், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து இரியூர் புறநகர் போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

தம்பதி

  போலீஸ் விசாரணையில், விபத்தில் சிக்கிய கார் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்றதும், சரக்கு வாகனம் ஷிரா நோக்கி சென்றதும், அப்போது எதிர்பாராவிதமாக காரும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்டது தெரியவந்தது.

  மேலும் விபத்தில் காரில் பயணம் செய்த ஒசதுர்காவை சேர்ந்த நமிராஜ் (வயது 58), அவரது மனைவி நந்தா (53) என்பதும், மற்றொருவர் சரக்கு வாகன டிரைவரான புனேயை சேர்ந்த ரங்கா (35) என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக இரியூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story