எடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து ஆ.ராசா விமர்சனம்: தமிழ் பெண்கள் மீது தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா? மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆவேச கேள்வி


எடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து ஆ.ராசா விமர்சனம்: தமிழ் பெண்கள் மீது தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா? மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆவேச கேள்வி
x
தினத்தந்தி 27 March 2021 8:49 PM GMT (Updated: 27 March 2021 8:49 PM GMT)

எடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து ஆ.ராசா விமர்சனத்துக்கு, தமிழ் பெண்கள் மீது தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா? என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று எழும்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் வடமாநிலத்தவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் ஜான் பாண்டியன் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன், மகள் நிவேதிதா பாண்டியன், மகன் வியங்கோ பாண்டியன் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் ஜான் பாண்டியனை ஆதரித்து, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசியதாவது:-

தேசத்தை கட்டமைத்தல், நாட்டின் வளர்ச்சி, பிரதமரின் எல்லோருடன் சேர்ந்து, எல்லோரும் நம்பிக்கையையும் பெற்று, எல்லோருடைய மேம்பாடு உள்ளிட்டவற்றுக்காக பெ.ஜான் பாண்டியன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். எனவே 6-ந்தேதி வாக்களிக்க செல்லும்போது தாமரையை மலரச் செய்ய இரட்டை இலை பொத்தானை அழுத்துங்கள். ஜான் பாண்டியனை வெற்றிப் பெறச் செய்யுங்கள்.

இந்த புண்ணிய பூமியான தமிழகத்தில் தாமரை மலரட்டும். தமிழகம் வளரட்டும். தாமரை மலர்ந்து, தமிழகம் செழிப்படையும். காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய ஜனநாயக கூட்டணி நாட்டுக்கு அவமானத்தை தேடி கொடுத்தது. 2 ஜி ஊழலை அறிந்த மக்கள், ஒன்றாக சேர்ந்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தார்கள்.

தமிழகத்தில் 94 லட்சம் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்கினார்கள். ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கியதால் என்ன பயன்? என்று காங்கிரஸ்-தி.மு.க. கேள்வி எழுப்பினார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்த வங்கி கணக்கு மூலமாக 22 கோடி ஏழை பெண்கள் ரூ.30 ஆயிரம் கோடி நிவாரணத்தை, வங்கி கணக்கில் நேரடியாக பெற்றனர். காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், ஏழை பெண்கள் வங்கி கணக்கில் நேரடியாக அரசு கருவூலத்தில் இருந்து நிவாரணம் பெற்றிருக்க முடியுமா?

தி.மு.க. வாரிசு அரசியல், பணம் மற்றும் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார்கள். மனித சமூகம் இதுவரை கண்டிராத பெருந்தொற்றை இந்தியா சந்தித்தது. ஆனால் நரேந்திர மோடி தலைமையினால், 80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.

முத்ரா திட்டத்தின் மூலம் 50 கோடி மக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 96 லட்சம் தமிழர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள்.

நாட்டிலேயே முதல் முறையாக 10 கோடி கழிவறைகள் ஏழை குடும்பத்துக்காக கட்டப்பட்டுள்ளது. ஏழை பெண்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். பா.ஜ.க.வால், தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கழிவறை வசதியை பெற்றிருக்கின்றன. பெண்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை மிகவும் தரம் தாழ்ந்து மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒவ்வொரு சராசரி தமிழ் பெண்கள் மீதும் தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா? என்ற கேள்வி எழுகிறது. அதனால் தான் 6-ந்தேதி வாக்களிக்கும்போது நினைவு வைத்து வாக்களிக்கும்போது வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story