முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார்; 4-வது வீடியோ வெளியிட்டு இளம்பெண் பரபரப்பு பேச்சு


முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார்; 4-வது வீடியோ வெளியிட்டு இளம்பெண் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 27 March 2021 9:47 PM GMT (Updated: 27 March 2021 9:47 PM GMT)

ஆபாச வீடியோ வெளியானதும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் உதவி கேட்க அவரது வீட்டுக்கு சென்றேன் என்றும், முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார் என்றும் 4-வது வீடியோவை வெளியிட்டு இளம்பெண் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:


இளம்பெண்ணின் 4-வது வீடியோ

  கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து நேற்று முன்தினம் இளம்பெண் சார்பாக, அவரது வக்கீல் ஜெகதீஷ் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். அதன்பேரில், ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவான சிறிது நேரத்தில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசிய ஒரு ஆடியோ வெளியாகி இருந்தது. அந்த ஆடியோவில் இளம்பெண் பேசும் போது தன்னுடன் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

  அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று குடும்பத்தினரிடம் கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் பெயரை இளம்பெண் கூறியது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆபாச வீடியோவில் இருப்பதாக கூறப்படும் இளம்பெண் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே 3 முறை வீடியோ வெளியிட்டு பேசி இருந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் இளம்பெண் தான் பேச்சு அடங்கிய 4-வது வீடியோவை வெளியிட்டார்.
  அந்த வீடியோவில் இளம்பெண் பேசியதாவது:-

கொலை செய்ய திட்டம்

  நான் வாழ்வதா?, சாவதா? என்பதே தெரியவில்லை. ஆபாச வீடியோ வெளியான பின்பு கடந்த 24 நாட்களாக தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுக்கப்படுகிறது. என்னையும், எனது குடும்பத்தினரையும் கொலை செய்ய ரமேஷ் ஜார்கிகோளி திட்டமிடுகிறார். இந்த திட்டத்தில் இருந்து அவர் பின்வாங்க போவதில்லை என்று எனக்கு தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது ரமேஷ் ஜார்கிகோளியின் பெயரை எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.

  கடந்த 2-ந் தேதி எனது சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ வெளியானதும் எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தேன். ஒரு விதமான அச்சத்தில் இருந்தேன். எனக்கு யாரையும் தெரியாது. பத்திரிகை துறையை சேர்ந்த நரேஷ் அண்ணா (நரேஷ்கவுடா) மட்டும் தான் தெரியும். அவரிடம் ஆபாச வீடியோ வெளியாகி இருப்பது பற்றியும், எனக்கு உதவி செய்யும்படியும் கேட்டேன். அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார். தைரியமாக இருக்கும்படி நரேஷ் அண்ணா தெரிவித்தார்.

டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு...

  தனக்கு டி.கே.சிவக்குமாருடன் நல்ல பழக்கம் இருப்பதாகவும், சித்தராமையாவையும் தெரியும் என்றும் நரேஷ் தெரிவித்தார். அவர்களிடம் செல்லலாம் என்று அவர் கூறினாா். அதன்படி, எனது வீடியோ சம்பந்தப்பட்ட விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரிடம் உதவி கேட்க, அவரது வீட்டுக்கு சென்றேன். நரேஷ் தான் என்னை அழைத்து சென்றாா். ஆனால் டி.கே.சிவக்குமார் வீட்டில் இல்லை என்பதால் திரும்பி வந்து விட்டோம். வீடியோ வெளியானதும் எனது குடும்பத்தினர் மிகவும் பயத்தில் இருந்தனர்.

  எனக்கு அடிக்கடி செல்போனில் பேசினார்கள். நான் எங்கு இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேனா? என பெற்றோர் கேட்டனர். அவர்களுக்கு ஒரு தைரியத்தை ஏற்படுத்தும் விதமாகவே என்னுடன் டி.கே.சிவக்குமார் இருப்பதாக கூறினேன். எனது பெற்றோருடன் நான் பேசிய ஆடியோ எப்படி வெளியானது என்று கூட தெரியவில்லை.

பரபரப்பு

  ஆபாச வீடியோ விவகாரத்தில் எனது மானம், மரியாதை எல்லாம் போய் விட்டது. கடந்த 24 நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எவ்வளவு பணம் செலவு செய்தாலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவதாக ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார். அதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

  இவ்வாறு அந்த வீடியோவில் இளம்பெண் கூறியுள்ளார்.
  அதே நேரத்தில் ஆபாச வீடியோ விவகாரத்தில் மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருக்கும் நரேஷ்கவுடா பற்றி நேற்று முதல் முறையாக இளம்பெண் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆபாச வீடியோ விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரிடம் உதவி கேட்க, அவரது வீட்டுக்கு சென்றதாக இளம்பெண் கூறி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6-வது முறையாக போலீஸ் நோட்டீசு

முன்னாள் மந்திரியின் ஆபாச வீடியோ விவகாரத்தில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலா் தினேஷ் கல்லஹள்ளி கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக கோரி இளம்பெண்ணுக்கு 5 முறை போலீசாா் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனா். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இளம்பெண் சார்பாக, அவரது வக்கீல் ஜெகதீஷ் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, இளம்பெண்ணின் வக்கீலிடம் போலீசார் நோட்டீசு வழங்கி உள்ளனர். மேலும் இளம்பெண்ணின் இ-மெயில், வாட்ஸ்-அப்புக்கும் போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். ஒட்டு மொத்தமாக விசாரணைக்கு ஆஜராகும்படி இளம்பெண்ணுக்கு 6-வது முறை நோட்டீசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story