காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை ஆணவக்கொலை செய்த சகோதரர் கைது


காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை ஆணவக்கொலை செய்த சகோதரர் கைது
x
தினத்தந்தி 7 April 2021 3:14 AM IST (Updated: 7 April 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பமாக, அவரை ஆணவக்கொலை செய்ததாக அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

இளம்பெண் உடல் மீட்பு

  பெங்களூரு ஹெண்ணூர் அருகே வசித்து வருபவர் கிரண்(வயது 25). டிரைவரான இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது சகோதரி மங்களா(19). இவர், தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒரு இளம்பெண் பலத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். முதலில் அவர் யார்?, எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. மேலும் ரெயில் முன்பு பாய்ந்து அந்த இளம்பெண் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள். இதற்கிடையில், போலீஸ் விசாரணையில், அந்த இளம்பெண் ஹெண்ணூரை சேர்ந்த மங்களா என்று உடல் அடையாளம் காணப்பட்டது.

சகோதரர் கைது

  அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, ரெயில் தண்டவாளம் அருகே ஒரு ஆட்டோ வருவதும், அதற்குள் இருந்து இளம்பெண்ணை ஒருவர் தூக்கி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக மங்களா தற்கொலை செய்யவில்லை என்பதையும், வேறு இடத்தில் வைத்து அவரை கொலை செய்துவிட்டு உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என்பதையும் போலீசாா் உறுதி செய்தார்கள்.

  மேலும் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அந்த ஆட்டோவின் பதிவு எண் மூலமாக டிரைவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆட்டோ மங்களாவின் சகோதரர் கிரணுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தனது தங்கையை ஆணவக்கொலை செய்ததை கிரண் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

தங்கை குத்திக்கொலை

  அதாவது தனியார் தொழிற்சாலையில் வேலை செய்த மங்களாவும், ஒரு வாலிபரும் காதலித்துள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சேர்ந்து சுற்றி திரிந்துள்ளனர். இதுபற்றி கிரணுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் தனது தங்கையை கண்டித்துள்ளார். வாலிபருடனான காதலை கைவிடும்படியும் அவர் கூறியுள்ளார். ஆனால் மங்களா கேட்கவில்லை. மாறாக கடந்த 4-ந் தேதி காதலனுடன் வெளியே சுற்றி திரிந்துவிட்டு வீட்டுக்கு இரவில் தாமதமாக மங்களா வந்துள்ளார். இதுதொடர்பாக அவருடன் கிரண் சண்டை போட்டுள்ளார்.

  பின்னர் திடீரென்று ஆத்திரமடைந்த கிரண் வீட்டில் இருந்த கத்தியால் மங்களாவை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தனது தங்கை தற்கொலை செய்து கொண்டது போல இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது உடலை தனனுடைய ஆட்டோவில் எடுத்து சென்று ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு அவர் வந்திருந்தார். ஆனால் கேமராவில் பதிவான காட்சிகளால் கிரண் போலீசாரிடம் சிக்கி இருந்தார். கைதான கிரண் மீது பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story