வெடிகுண்டு கார் வழக்கு கொலையான ஹிரன் மன்சுக், கைதான போலீஸ் அதிகாரியின் கூட்டாளி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 7 April 2021 8:30 PM GMT (Updated: 7 April 2021 8:30 PM GMT)

முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைதான போலீ்ஸ் அதிகாரியின் கூட்டாளி தான் கொலையான ஹிரன் மன்சுக் என்று கோர்ட்டீல் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

மும்பை
முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைதான போலீ்ஸ் அதிகாரியின் கூட்டாளி தான் கொலையான ஹிரன் மன்சுக் என்று கோர்ட்டீல் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
 வெடிகுண்டு கார் வழக்கு
பிரபல தொழில் அதிபரான ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலா 27 மாடி வீடு தென்மும்பை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த ஆடம்பர வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி வெடிகுண்டு கார் ஒன்று நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்த காரின் உரிமையாளரான தானேயை சேர்ந்த ஹிரன் மன்சுக் கடந்த மாதம் 5-ந் தேதி மும்ரா கழிமுகத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள், மும்பை உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேயை கைது செய்தனர்.
விசாரணையில், வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டதன் சதிகாரர் சச்சின் வாசே என்பது தெரியவந்தது. 
இந்தநிலையில் புதிய திருப்பமாக கொலையான ஹிரன் மன்சுக், கைதான சச்சின் வாசேயின் கூட்டாளி என்று தெரியவந்துள்ளது. 
இந்த தகவலை தேசிய புலனாய்வு முகமை நேற்று மும்பை சிறப்பு கோர்ட்டில் தெரிவித்துள்ளது. சச்சின் வாசேயின் காவலை நீட்டிக்க கோரி கோர்ட்டை அணுகிய என்.ஐ.ஏ. கூறியதாவது:-
பெரிய தொகை
சச்சின் வாசே தனது உதவியாளர்களுக்கு ரூ.76 லட்சம், ரூ.40 லட்சம் மற்றும் ரூ.36 லட்சம் என வழங்கியுள்ளார். 
இந்த பணம் காரில் வைக்கப்பட்டு இருந்த ஜெலட்டின் குச்சிகளை வாங்க பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என கருதுகிறோம். இவ்வளவு பெரிய தொகை அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
அதுமட்டும் இன்றி வெடிகுண்டு கார் வழக்கில் ஹிரன் மன்சுக், சச்சின் வாசேக்கு கூட்டாளியாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். ஹிரன் மன்சுக் கொலையில் சச்சின் வாசேவுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. 
இவ்வாறு என்.ஐ.ஏ. தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சச்சின் வாசேவின் என்.ஐ.ஏ. காவலை  வருகிற 9-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Next Story