தந்தைக்கு ஆதரவாக பேசியதால் 3 வயது பெண் குழந்தையை கொன்ற தாய்
பெங்களூருவில் தகராறின் போது தந்தைக்கு ஆதரவாக பேசிய 3 வயது பெண் குழந்தையின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துவிட்டு மாயமானதாக நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
குழந்தை மாயம்
பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லத்தஹள்ளியில் வசித்து வருபவர் ஈரண்ணா. இவரது மனைவி சுதா (வயது 35). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் ஈரண்ணா தொழிலாளியாகவும், சுதா வீட்டு வேலையும் செய்து வந்தனர். ஈரண்ணாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல, நேற்று முன்தினம் மதியமும் தம்பதி இடையே சண்டை உண்டானது.
பின்னர் ஈரண்ணா வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது தனது குழந்தையை எடுத்து கொண்டு சுதா வெளியே சென்றுள்ளார். மாலையில் தனது மனைவியை தொடர்பு கொண்டு ஈரண்ணா பேசியுள்ளார். அப்போது குழந்தையுடன் கோபி மஞ்சூரியன் வாங்க சென்றதாகவும், கடையில் வைத்து குழந்தை காணாமல் போய் விட்டதாகவும் ஈரண்ணாவிடம் சுதா தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.
பிணமாக மீட்பு
பின்னர் ஈரண்ணாவும், சுதாவும் சேர்ந்து தங்களது குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து, குழந்தையை காணவில்லை என்று கூறி ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் ஈரண்ணா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடிவந்தார்கள். இந்த நிலையில், நேற்று காலையில் அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகரபாவியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே ஒரு குழந்தை பிணமாக கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
உடனே போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது ஞானபாரதியில் குழந்தை காணாமல் போனதாக வழக்குப்பதிவாகி இருப்பது அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசாருக்கு தெரியவந்தது. இதுபற்றி ஞானபாரதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஈரண்ணா, சுதா ஆகியோரை போலீசார் நாகரபாவிக்கு அழைத்து சென்றனர். அப்போது காணாமல் போன தங்களது 3 வயது குழந்தை தான் என்பதை தம்பதி அடையாளம் காட்டினார்கள்.
தாய் கைது
குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் குழந்தையை கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசாா உறுதி செய்தார்கள். மேலும் நேற்று முன்தினம் மாலையில் சுதா, குழந்தையை அழைத்து சென்றிருந்தது தெரியவந்ததால், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கடையில் இருந்து தனது குழந்தை காணாமல் போனதாக போலீசாரிடம் முதலில் சுதா கூறினார்.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடைய குழந்தையை தானே கொலை செய்ததை சுதா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, சுதாவை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
தந்தைக்கு ஆதரவு
அதாவது ஈரண்ணாவுக்கும், சுதாவுக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் போது, தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக தான் அந்த 3 வயது குழந்தை பேசி வந்துள்ளது. தந்தை மீதே அந்த குழந்தை அதிக அன்பு காட்டியும் வந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த ஈரண்ணா டி.வி.யில் செய்தி சேனலை பார்த்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது வேறு சேனலை மாற்றுவது தொடர்பாக ஈரண்ணாவுக்கும், சுதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் தனது தந்தைக்கு ஆதரவாக குழந்தை பேசியதுடன், சுதாவை பைத்தியம் என்று கூறியுள்ளது. கணவருடன் நடக்கும் தகராறின் போது, அவருக்கு ஆதரவாகவும், தந்தை மீது அதிக அன்பு காட்டியதாலும் ஆத்திரமடைந்த சுதா, பெற்ற குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
கழுத்தை இறுக்கி கொலை
இதற்காக நாகரபாவிக்கு தன்னுடைய குழந்தையை சுதா அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் வைத்து தன்னுடைய குழந்தையின் கழுத்தை துப்பட்டால் இறுக்கி சுதா கொலை செய்துள்ளார். பின்னர் தனது குழந்தை காணாமல் போய் விட்டதாக கூறி அவர் நாடகமாடியதும் தெரியவந்தது. மேற்கண்ட தகவலை மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் தெரிவித்தார்.
கைதான சுதா மீது அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story