மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் சிவசேனா மந்திரி அனில் பரப் பணம் வசூலிக்க கட்டாயப்படுத்தினார்; கைதான போலீஸ் அதிகாரி, நீதிபதிக்கு பரபரப்பு கடிதம்
மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்து தரும்படி சிவசேனா மந்திரி அனில் பரப் தன்னை கட்டாயப்படுத்தினார் என்று வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே நீதிபதியிடம் பரபரப்பு கடிதம் வழங்கினார்.
வெடிகுண்டு கடிதம்
மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீ்ட்டு அருகே வெடிகுண்டு கார் மீட்கப்பட்ட வழக்கில், உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே கைது செய்யப்பட்டார். இதையடுத்து மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் சூறாவளி புயல் வீசி வருகிறது.
மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர போலீசாரை மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார் என்று இடமாற்றம் செய்யப்பட்ட மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கூறிய குற்றச்சாட்டை அடுத்து அந்த மந்திரி பதவியை இழந்தார்.
இந்தநிலையில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, சச்சின் வாசே தான் கைப்பட எழுதிய பரபரப்பு கடிதம் ஒன்றை நீதிபதி பி.ஆர். சிட்ரேயிடம் கொடுத்தார். அந்த வெடிகுண்டு கடிதத்தில், பதவி இழந்த மந்திரி அனில் தேஷ்முக் மீதும், சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து மந்திரி அனில் பரப் மீதும் பரப்பரப்பு முறைகேடு புகார்களை கூறியிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ரூ.50 கோடி பேரம்போலி என்கவுன்டர் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட நான் மீண்டும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி பணியில் சேர்த்து கொள்ளப்பட்டேன். முன்னதாக இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது பணி சேர்ப்பு நடவடிக்கையை ஒத்திவைக்கும்படி அப்போதைய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை அறிவுறுத்தினார். இதையடுத்து அனில் தேஷ்முக் என்னிடம் பணியில் நீடிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.2 கோடி தர வேண்டும். அப்படி தந்தால் சரத்பவாரை சமாதானப்படுத்துவேன் என்று கூறினார். அவ்வளவு பெரிய தொகை என்னிடம் இல்லை என்று கூறினேன். இதனால் பின்னர் தரும்படி அவர் என்னிடம் கூறினார்.
மேலும் குற்றச்சாட்டுகளை சந்தித்து உள்ள சபி புர்கானி அப்லிப்மெண்ட் அமைப்பு குறித்து விசாரணை நடத்துமாறும், அந்த அமைப்பிடம் இருந்து ரூ.50 கோடி பெற பேரம் பேசும்படியும் என்னை வலியுறுத்தினார்.
மற்றொரு மந்திரிஇதேபோல மாநில போக்குவரத்து மந்திரி அனில் பரப், மும்பை மாநகராட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்த என்னிடம் கூறினார். சுமார் 50 ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.2 கோடி வசூலித்து தர கட்டாயப்படு்த்தினார்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். இந்த விஷயத்தில் முறையான நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் சச்சின் வாசேயை அறிவுறுத்தினார்.
மந்திரி மறுப்புபுதிதாக குற்றச்சாட்டுக்கு ஆளான மந்திரி அனில் பரப், சிவசேனாவை சேர்ந்தவர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவர் என அறியப்படுவர் ஆவார்.
இந்தநிலையில் மந்திரி அனில் பரப், சச்சின் வாசேயின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே மற்றும் எனது 2 மகள்கள் மீது சத்தியம் செய்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் முதல்-மந்திரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் குறிவைக்கப்படுவதாக கருதுகிறேன்.
மற்றொரு விக்கெட் விழும் என்று பா.ஜனதா தலைவர்கள் கடந்த 2 நாட்களாக கூறி வருகின்றனர். எனவே இதில் சதி உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் கூட்டணி அரசை களங்கப்படுத்தும் பா.ஜனதாவின் வியூகம் இது. இந்த சதி திட்டத்தின் அடிப்படையில் தான் சச்சின் வாசே இதுபோன்ற கடிதத்தை நீதிபதியிடம் கொடுத்துள்ளார்" என்றார்.