கர்நாடகத்திற்குள் 17 சிறப்பு ரெயில்கள் இயக்கம்


கர்நாடகத்திற்குள் 17 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 8 April 2021 8:58 PM GMT (Updated: 8 April 2021 8:58 PM GMT)

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் எதிரொலியாக கர்நாடகத்திற்குள் 17 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

பெங்களூரு:

17 சிறப்பு ரெயில்கள்

  தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
  கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர். இதன்காரணமாக யுகாதி பண்டிகையையொட்டி பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல 17 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:-

  யஷ்வந்தபுரத்தில் இருந்து பெலகாவிக்கு 9-ந் தேதி (இன்று) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் 10-ந் தேதி (நாளை) காலை 9.10 மணிக்கு பெலகாவியை சென்றடையும். மறுமார்க்கமாக வருகிற 14-ந் தேதி இரவு 10 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.40 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

யஷ்வந்தபுரம்-விஜயாப்புரா

  இதுபோல யஷ்வந்தபுரத்தில் இருந்து பெலகாவிக்கு 10-ந் தேதி (நாளை) ஒரு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. யஷ்வந்தபுரத்தில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 9.10 மணிக்கு பெலகாவி செல்கிறது. மறுமார்க்கமாக வருகிற 11-ந் தேதி இரவு 10 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்படும் ரெயில் 12-ந் தேதி காலை 8.40 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.

  யஷ்வந்தபுரம்-விஜயாப்புரா இடையே 9-ந் தேதி (இன்று) சிறப்பு ரெயில் இயங்குகிறது. இரவு 6.20 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரெயில் 10-ந் தேதி (நாளை) காலை 10.15 மணிக்கு விஜயாப்புராவை சென்றடையும்.

மைசூரு-பீதர்

  யஷ்வந்தபுரம்-பீதர் இடையே 10-ந் தேதி (நாளை) சிறப்பு ரெயில் இயங்குகிறது. இரவு 11.15 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 12 மணிக்கு பீதரை சென்றடையும். மறுமார்க்கமாக 11-ந் தேதி பீதரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில், மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு யஷ்வந்தபுரத்திற்கு வரும்.

  மைசூரு-பீதர் இடையே 9-ந் தேதி (இன்று) சிறப்பு ரெயில் இயங்க உள்ளது. இரவு 8 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்படும் ரெயில் 10-ந் தேதி (நாளை) மதியம் 12 மணிக்கு பீதரை சென்றடையும். மறுமார்க்கமாக 10-ந் தேதி (நாளை) பீதரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில் 11-ந் தேதி காலை 8 மணிக்கு மைசூருவுக்கு செல்கிறது.

பெங்களூரு-மைசூரு

  கே.எஸ்.ஆர்.பெங்களூரு-மைசூரு இடையே 9, 10, 14-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் இயங்க உள்ளது. காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 1.30 மணிக்கு மைசூருவை சென்றடையும். மறுமார்க்கமாக 9, 10, 14-ந் தேதிகளில் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயங்குகிறது. மைசூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 5.10 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

  மைசூரு-யஷ்வந்தபுரம் இடையே 9, 10, 14-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மைசூருவில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 11.20 மணிக்கு யஷ்வந்தபுரத்திற்கு வரும். மறுமார்க்கமாக யஷ்வந்தபுரத்தில் இருந்து மைசூருவுக்கு 9, 10, 14-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் இயங்குகிறது. மதியம் 1.15 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் புறப்படும் ரெயில் 4 மணிக்கு மைசூருவுக்கு செல்லும்.

யஷ்வந்தபுரம்-கார்வார்

  யஷ்வந்தபுரம்-சிவமொக்கா இடையே சிறப்பு ரெயிலகள் இயங்குகிறது. 9-ந் தேதி (இன்று) இரவு 11.45 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் புறப்படும் ரெயில் 10-ந் தேதி (நாளை) காலை 6 மணிக்கு சிவமொக்காவுக்கு செல்கிறது. மறுமார்க்கமாக 10-ந் தேதி (நாளை) காலை சிவமொக்காவில் 9 மணிக்கு புறப்படும் ரெயில் அன்று மாலை 4.15 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு வருகிறது.

  யஷ்வந்தபுரம்-கார்வார் இடையே சிறப்பு ரெயில்கள் இயங்க உள்ளது. 9-ந் தேதி (இன்று) இரவு 11.45 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் புறப்படும் ரெயில் 10-ந் தேதி (நாளை) மதியம் 3.40 மணிக்கு கார்வாருக்கு செல்லும். மறுமார்க்கமாக 10-ந் தேதி (நாளை) மாலை 4.10 மணிக்கு கார்வாரில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு யஷ்வந்தபுரத்திற்கு வந்தடையும்.
  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story