பெங்களூருவில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய முடிவு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்


பெங்களூருவில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய முடிவு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
x
தினத்தந்தி 8 April 2021 9:13 PM GMT (Updated: 8 April 2021 9:13 PM GMT)

பெங்களூருவில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களுரு:

கொரோனா பரிசோதனை

  பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் 8,500 பூத்துகள் உள்ளன. இதில் மருத்துவ குழுக்களை அமைத்து, வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம்.

50 சதவீத படுக்கைகள்

  கொரோனா பரிசோதனைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மருத்துவ குழுவினருடன் யாரும் வாக்குவாதம் செய்யக்கூடாது. இந்த குழுக்கள், கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்தல், உடல் ஆரோக்கிய பாதுகாப்பு, முத்திரையை இடுவது, உடல் ஆரோக்கிய பரிசோதனை, ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

  பெங்களூருவில் வார்டுகளுக்கு தலா ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 250 ஆம்புலன்சுகள் தயாராக உள்ளன. தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினரை வழங்குமாறு போலீஸ் துறையிடம் கேட்டுள்ளோம். இவர்கள் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

30 லட்சம் டோஸ் தடுப்பூசி

  பெங்களூருவில் 1,000 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக தயாராக உள்ளன. ஆனால் மாநகராட்சி கமிஷனர், 4,000 படுக்கைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் விவரங்கள் குறித்து ஆன்லைனில் தகவல் வெளியிடப்படும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை.

  கர்நாடகத்தில் 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. மேலும் 25 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தடுப்பூசியை போடும் பணி தொடங்க உள்ளது. இதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story