தேசிய செய்திகள்

சிவகாசி பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களா? - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் + "||" + Are there any banned chemicals in Sivakasi crackers? - CBI in the Supreme Court. Report filed

சிவகாசி பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களா? - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்

சிவகாசி பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களா? - சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
சிவகாசி பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் உள்ளனவா? என்பது குறித்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்குவங்காளத்தை சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிப்பதுக்கு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் கடந்த ஆண்டு மார்ச் 3-ந்தேதி நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் மனுதாரர் அர்ஜூன் கோபால் தரப்பில் ஆஜரான வக்கீல் கோபால் சங்கரநாராயணன் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன பொருட்களை கொண்டு தற்போதும் சிவகாசியில் சில பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கூறி பட்டாசுகள் வைக்கும் சில காலிப்பெட்டிகளை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதற்கு பட்டாசு ஆலை தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் சாயி தீபக் இந்த பட்டாசு தங்கள் தயாரிப்பு அல்ல என்று மறுத்ததோடு, தங்களது பெயரில் ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனைக்கு மார்க்கெட்டில் வருவதாக கூறினார்.

இதனை தொடர்ந்து சென்னை மண்டல சி.பி.ஐ. இயக்குனர் சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறதா? என்று விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி கடந்த விசாரணையில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறதா என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு அதன் அறிக்கையை சி.பி.ஐ. சீலிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் அர்ஜுன் கோபால் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க எதிர்மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.