தடுப்பூசி பற்றாக்குறை: ஒடிசாவில் 700 மையங்கள் மூடப்படும்; அதிகாரி தகவல்


தடுப்பூசி பற்றாக்குறை:  ஒடிசாவில் 700 மையங்கள் மூடப்படும்; அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 9 April 2021 2:06 AM GMT (Updated: 9 April 2021 2:06 AM GMT)

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் புனே, பன்வெல்லை தொடர்ந்து ஒடிசாவில் 700 மையங்கள் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படுகிறது.

புனே,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதற்கான பணிகள் கடந்த மார்ச் 1ந்தேதி தொடங்கியது.  தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என தகவல் வெளிவருகிறது.  இதனால், மராட்டியத்தின் பன்வெல் மாநகராட்சி கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மராட்டியத்தின் பன்வெல் மாநகராட்சியை தொடர்ந்து புனே நகரிலும் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என கூறி 109 மையங்கள் மூடப்பட்டு விட்டன.

எனினும், மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறும்பொழுது, இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை.  தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.  மராட்டிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியுள்ளது என கூறியுள்ளார்.

சில மாநில அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருகின்றன என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், ஒடிசாவிலும் தடுப்பூசி பற்றாக்குறையால் கொரோனா தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி ஒடிசாவின் கொரோனா தடுப்பூசிக்கான பொறுப்பு அதிகாரி விஜய் பானிகிரஹி கூறும்பொழுது, தடுப்பூசி பற்றாக்குறையால் 2 நாட்களுக்கு தடுப்பூசி மையங்கள் செயல்பட முடியாது.

எங்களிடம் உள்ள தடுப்பூசி கையிருப்புகளை கொண்டு இன்று வரை (9ந்தேதி) தடுப்பூசி போட முடியும்.  2 நாட்களுக்குள் தடுப்பூசிகள் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.  சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வரும் சூழலில் தடுப்பூசிகள் போடும் பணிகள் முடங்கியுள்ளது பொதுமக்களிடையே சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Next Story