தேர்தல் வன்முறை எதிரொலி: மேற்குவங்காளத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைப்பு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை


தேர்தல் வன்முறை எதிரொலி: மேற்குவங்காளத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைப்பு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 April 2021 3:27 PM GMT (Updated: 10 April 2021 3:27 PM GMT)

மேற்குவங்காளத்தில் இன்று நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 44 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இன்று நடைபெற்ற தேர்தலில் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வன்முறை ஏற்பட்டது. 

இந்த வன்முறையை தடுக்கும் விதமாகவும், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், ஊடகத்துறையினரின் வாகனங்கள், வேட்பாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றன. 

இதனால், மேற்குவங்காளத்தில் இன்று நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தல் பெரும் பரபரப்புக்கு மத்தியில் நிறைவடைந்துள்ளது. இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அம்மாநிலத்தில் எஞ்சிய 4 கட்டங்களுக்கு முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு மேற்குவங்காளத்தில் நடைபெற உள்ள எஞ்சிய 4 கட்ட தேர்தலுக்கும் கூடுதல் பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதற்காக, கூடுதலாக மத்திய ஆயுத போலீஸ் படையின் 71 கம்பெனிகள் மேற்குவங்காளத்திற்கு அனுப்பிவைக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக அனுப்பப்பட உள்ள மத்திய ஆயுத போலீஸ் படையில் எல்லை பாதுகாப்பு படையினரின் 33 கம்பெனிகளும், இந்தோ தீபத் எல்லை போலீஸ் படையினரின் 13 கம்பெனிகளும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் 12 கம்பெனிகளும், சாஷ்ட்ரா சேமா பால் படையினரின் 9 கம்பெனிகளும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் 4 கம்பெனிகளும் இடம்பெற்றுள்ளன. 

மத்திய ஆயுத போலீஸ் படையின் ஒரு கம்பெனியில் குறைந்தபட்சம் தலா 85 வீரர்கள் இடம்பெறுவார்கள். இதன்மூலம் மேற்குவங்காளத்திற்கு கூடுதலாக சுமார் 6 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுகின்றனர்.

Next Story