கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்


கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்
x
தினத்தந்தி 10 April 2021 9:33 PM GMT (Updated: 10 April 2021 9:33 PM GMT)

கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், கோடை கால விடுமுறை விடப்படாது என்றும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

  பெங்களூருவில் நேற்று உயர்கல்வித்துறை மந்திாியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

திட்டமிட்டபடி தேர்வுகள்

  கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுகக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும். அதில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாது. என்ஜினீயரிங், டிப்ளமோ, பிற கல்லூரி படிப்புகளுக்கான தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்வுகள் நடைபெறும் மையங்கள் முற்றிலும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படும்.

  மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுகள் முடிந்ததும் கோடை கால விடுமுறை கிடையாது. 2021-2022-ம் ஆண்டுக்கான வகுப்புகள் உடனடியாக தொடங்கி நடைபெறும். கல்லூரிகளுக்கு வந்தும் மாணவ, மாணவிகள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக நடைபெறும் வகுப்புகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தயார்படுத்தி கொள்ள வேண்டும்

  கல்லூரிகளில் நடைபெறும் வகுப்புகளில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து கொண்டு வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பரவல் இருப்பதால் இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறாது என்று சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

  தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த உயர்கல்வித்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தேர்வுகளை எழுத மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
  இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story