4-வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை; தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பரிதவித்த மக்கள்


சொந்த ஊருக்கு செல்ல வந்த மக்கள்
x
சொந்த ஊருக்கு செல்ல வந்த மக்கள்
தினத்தந்தி 10 April 2021 9:41 PM GMT (Updated: 10 April 2021 9:41 PM GMT)

கர்நாடகத்தில் 4-வது நாளாக நேற்றும் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்ல பஸ்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவித்தனர். பின்னர் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களில் சென்றனர்.

பெங்களூரு:

சம்பள உயர்வு வழங்க...

  கர்நாடகத்தில் 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயா்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு பஸ் போக்குவரத்து ஊழியா்கள் கடந்த 7-ந் தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். அன்றைய தினத்தில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாநிலத்தில் அரசு பஸ்களின் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கி உள்ளது.

  போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அதுபோல், அரசும் கொரோனா பரவல் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மக்கள் அவதி


  இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. பெங்களூரு உள்பட மாநிலத்தில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு அரசு பஸ்கள் மட்டுமே ஓடியது. அதே நேரத்தில் மக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக நேற்று மாநிலம் முழுவதும் கூடுதலாக தனியார் பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நேற்று ஆயிரக்கணக்கான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் நேற்று முதல் கர்நாடகத்தில் தொடர் விடுமுறையாகும்.

  அதாவது இன்று (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 13-ந் தேதி யுகாதி, 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்காக தொடர் விடுமுறையாகும். இதன் காரணமாக பெங்களூருவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். அவ்வாறு சென்றவர்கள் பஸ்கள் கிடைக்காமல் பரிதவித்தனர். நீண்ட நேரமாக பரிதவித்த அவர்கள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் பஸ்கள், வாடகை கார்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ரெயில்கள் இயக்கம்

  அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெங்களூருவில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று கூடுதலாக ரெயில்களும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அவர்களுடன் அரசு அதிகாரிகள் ரகசியமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்களை மிரட்டும் பணியிலும் அரசு இறங்கியுள்ளது.

  இதற்காக தொழிலாளா்களின் சட்ட விதிமுறைகளின்படி போராட்டத்திற்கு தடை விதித்து தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மற்றொரு புறம் வேலைக்கு வராத ஊழியர்களை பணி இடமாற்றம் செய்வது, பணியில் இருந்து நீக்குவது, குடியிருப்புகளை காலி செய்யும்படி நோட்டீசு அனுப்புவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. ஆனாலும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வேலைக்கு திரும்ப மாட்டோம் என்று நேற்றும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரம்...

  அதே நேரத்தில் போக்குவரத்து ஊழியர்களின் சங்க தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் அரசு தயாராக இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த வாரம் வரை தொடர் விடுமுறை இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் ஒரு வாரம் போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த போவதில்லை என்றும், ஒரு வாரம் அரசு பஸ்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

  இதனால் ஊழியர்களும், அரசும் முரண்டு பிடிப்பதால் சாதாரண மக்கள் தான் பஸ்கள் கிடைக்காமல் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story