பெங்களூருவில் இரவு ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


பெங்களூருவில் இரவு ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 April 2021 9:54 PM GMT (Updated: 10 April 2021 9:54 PM GMT)

பெங்களூருவில் இரவு ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

போலீஸ் கமிஷனர் ஆலோசனை

  கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் கர்நாடக அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு நேற்று 10 மணி முதல் அமலுக்கு வந்தது.

  இந்த நிலையில் இரவு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து நேற்று காலை பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம், துணை போலீஸ் கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களை....

  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) முதல் பெங்களூருவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் இரவு 9 மணிக்கே கடைகளை அடைக்க அதன் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளை இரவு 9 மணிக்கு அடைக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் வரும் வாடிக்கையாளர்களை, கடைகளின் உரிமையாளர்கள் திருப்பி அனுப்ப வேண்டும்.

  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெங்களூருவில் யாரும் தேவையின்றி வெளியே நடமாட கூடாது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு வேலைக்கு செல்பவர்கள் இரவு 10 மணிக்கு முன்பாக சென்று விட வேண்டும். அதுபோல அதிகாலையில் பணி முடிப்பவர்கள் 5 மணிக்கு பின்னரே வெளியே வர வேண்டும். இரவு நேர பயணம் செய்பவர்கள் டிக்கெட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இரவு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும். அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்பவர்களுக்கு இந்த ஊரடங்கு பொருந்தாது.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story