ஹரித்துவாரில் கும்ப மேளாவையொட்டி கங்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் - கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அவலம்


ஹரித்துவாரில் கும்ப மேளாவையொட்டி கங்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் - கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அவலம்
x
தினத்தந்தி 14 April 2021 11:29 PM GMT (Updated: 14 April 2021 11:29 PM GMT)

கும்ப மேளாவையொட்டி, ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சமூக இடைவெளியை பின்பற்றாததால், கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாாில் கும்ப மேளா நடந்து வருகிறது. ஒரு மாதம் நடக்கும் இந்த திருவிழாவில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சாமியார்களும், பக்தர்களும் வந்து கங்கையில் புனித நீராடுவது வழக்கம்.

புனித நீராடுவது பல கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், 3-வது கட்ட புனித நீராடல் மிகவும் விசேஷமானது. அந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

‘அகாடா’ என்ற சாமியார்கள் அமைப்பை சேர்ந்த மடாதிபதிகள் புனித நீராடுவதற்காக, ‘‘ஹர் கி பைரி’ என்ற படித்துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. பல்லக்கில் எடுத்து வரப்பட்ட சாமி சிலைகளுடன் அவர்கள் புனித நீராடினர்.

நாகா சாதுக்கள் ஏராளமானோர் பெரும் ஊர்வலமாக வந்து புனித நீராடினர். லட்சக்கணக்கான சாதாரண பக்தர்கள், வேறு படித்துறைகளில் புனித நீராடினர்.

நேற்று மதியத்துக்குள் 8 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள்வரை புனித நீராடியதாக கும்ப மேளா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார் தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, எதிர்பார்த்ததை விட குறைவான கூட்டம்தான் வந்துள்ளதாக அவர் கூறினார்.

புனித நீராட வந்த பக்தர்களுக்கு போலீசார் முக கவசங்களை வினியோகித்தனர். ஆனால், புனித நீராடும்போது பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை.

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கும்பலாக நடமாடினர். இதனால், கொரோனா பரவல் மேலும் அதிரிக்கும் ஆபத்து உருவாகி உள்ளது.

உத்தரகாண்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவற்றில் ஹரித்துவாரில் மட்டும் 594 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Next Story