மேற்குவங்காளம்: 5-ம் கட்ட தேர்தலில் 78.36% வாக்குப்பதிவு


மேற்குவங்காளம்: 5-ம் கட்ட தேர்தலில் 78.36% வாக்குப்பதிவு
x

மேற்குவங்காளத்தில் நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட தேர்தலில் 78.36% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 45 தொகுதிகளிலும் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். மதியம் 1.30 மணி நிலவரப்படி 54.67% வாக்குகளும்,  மாலை 3.30 மணி நிலவரப்படி 62.40% வாக்குகளும், மாலை 4.15 மணி நிலவரப்படி 69.40% வாக்குகளும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட தேர்தலில் 78.36% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மாலை 6.30 மணி நிலவரம் எனவும் இந்த வாக்குவிகிதத்தில் இருந்து இறுதியான வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட தேர்தல் வன்முறையின்றி, அமைதியான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Next Story