சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு


சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு
x
தினத்தந்தி 18 April 2021 11:48 PM GMT (Updated: 18 April 2021 11:48 PM GMT)

தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியில் கொரோனா நிலை குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் கொரோனா நிலை குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது உள்ளூர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் பேசிய அவர், மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முக கவசம் அணிவது ஆகியவற்றை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்த மேற்கொண்டதைப் போல தற்போதும், தேடுதல், கண்டுபிடித்தல், பரிசோதித்தல் என்ற முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்...

தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறிய மோடி, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த விஷயத்தில் மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் முழுமையாக உதவ வேண்டும், சமூகம் மற்றும் அரசின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

தொகுதி மக்களவை உறுப்பினராக தான் தொடர்ந்து வாரணாசி மக்களின் கருத்தை அறிந்துவருவதாக கூறிய மோடி, அந்நகரில் மருத்துவ வசதிகளை நவீனப்படுத்தி விரிவுபடுத்தியிருப்பது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவிவருகிறது. ஆஸ்பத்திரி படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆக்சிஜன் வசதி அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

கொரோனா உதவி மையம்

வாரணாசியில் கொரோனா உதவி மையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதை குறிப்பிட்ட மோடி, பிற நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட வேண்டும் என்றார்.

கட்டுப்பாட்டு அறை, ஆம்புலன்ஸ் சேவைக்கான தனி தொலைபேசி எண் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும், டெலிமெடிசின் வசதி குறித்தும் அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாரணாசி தொகுதியில் இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேருக்கு முதல் ‘டோஸ்’ தடுப்பூசியும், 35 ஆயிரத்து 14 பேருக்கு 2-வது ‘டோஸ்’ தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story