கொரோனா பாதிப்பு; வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதியுதவி அறிவிப்பு


கொரோனா பாதிப்பு; வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதியுதவி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2021 11:09 AM GMT (Updated: 19 April 2021 11:09 AM GMT)

டெல்லியில் கொரோனா பாதிப்பு ஏற்படும் வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதியுதவி அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுபற்றி முதல் மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.

நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகளால் நிலைமை மோசமடைந்து உள்ளது என சுட்டி காட்டியும், கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன என குறிப்பிட்டும் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் நேற்று எழுதியுள்ளார்.  அவசர தேவையாக அவற்றை வழங்க வேண்டுமென்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டால் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வழக்கறிஞர்கள், காப்பீடு திட்டம் எதிலும் சேராதவர்கள் என்றால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story