கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்; சிவசேனா வலியுறுத்தல்


கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்; சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 April 2021 2:35 PM GMT (Updated: 19 April 2021 2:35 PM GMT)

கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு கூட்டம்

கொரோனா நிலவரம் தொடர்பாக நாட்டின் சில முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் அனைவரும் சூழ்நிலை மிகவும் தீவிரமாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர். முன் எப்போதும் இல்லாத மற்றும் போர் போன்ற சூழல் நிலவுகிறது.எங்கும் பதற்றம் நிலவுகிறது. நோயாளிகளுக்கு படுக்கை இல்லை. ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசியும் இல்லை. மொத்தத்தில் இது குழப்பத்தை தவிர வேறு எதுவும் இல்லை. எனவே கொரோனா நிலவரம் குறித்து விவாதிக்க குறைந்தபட்சம் 2 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.

உண்மை நிலவரம் மறைப்பு

கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறித்து பல மாநிலங்கள் உண்மையை மறைத்தன. ஆனால் அந்த நடைமுறையை தற்போது சில மாநிலங்கள் நிறுத்தி விட்டன. அங்கு இறுதி சடங்குகளை தான் காண முடிகிறது. கொரோனா நிலவரம் தொடர்ந்து அதிகரித்து, அது மறைக்கப்பட்டு, நிலைமையை கையாள அரசால் முடியவில்லை என்றால் அராஜகம் தான் தலைதூக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு மராட்டிய பா.ஜனதா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘நீங்கள்(சஞ்சய் ராவத்) சரியாக சொன்னீர்கள். மராட்டியத்தின் நிலவரத்தை தெளிவாக விளக்கி உள்ளீர்கள். எனவே முதலில் மராட்டிய சட்டசபையை கூட்டி விவாதிக்க வேண்டும்’’ என்றார்.


Next Story