காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 20 April 2021 10:45 AM GMT (Updated: 20 April 2021 10:45 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்திக்கு (வயது 50) கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன.  இதனை தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன்.  அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி, பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு காய்ச்சல் ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  88 வயதுடைய அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

கோவேக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்து கொண்ட அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் குணமடைந்து திரும்ப வேண்டுமென்று ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டார்.

மேற்கு வங்காளத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடந்து வரும் சூழலில், ராகுல் காந்தி தனது அனைத்து தேர்தல் பிரசாரங்களையும் ரத்து செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.  இதேபோன்று மற்றவர்களையும் அவர் பிரசாரத்தில் இருந்து விலகி இருக்கும்படி கேட்டு கொண்டார்.  இந்த சூழலில் ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


Next Story