திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் தொடக்கம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் தொடக்கம்
x
தினத்தந்தி 24 April 2021 6:50 PM GMT (Updated: 24 April 2021 6:50 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது. வசந்த காலத்தில் உற்சவர் மலையப்பசாமிக்காக நடத்தப்படும் விழா என்பதால், ‘வசந்தோற்சவம்’ என்ற பெயர் பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் வசந்தோற்சவம் கோவிலுக்கு பின்பக்கம் உள்ள வசந்த மண்டபத்தில் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளே கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.

முதல் நாளான நேற்று காலை விஸ்வசேஷா ஆராதனம், புண்யாவச்சனம், நவ கலசாபிஷேகம், ராஜோபாச்சாரம் நடந்தது. மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால் தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

அதைத்தொடர்ந்து உற்சவர்களுக்கு தூப, தீப நைவேத்தியம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆஸ்தானம் நடந்தது. இரவு 7 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Next Story