தினமும் 3 லட்சத்துக்கு அதிகமானோரை பாதித்தாலும் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் குறைகிறது


தினமும் 3 லட்சத்துக்கு அதிகமானோரை பாதித்தாலும் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் குறைகிறது
x
தினத்தந்தி 25 April 2021 6:54 PM GMT (Updated: 25 April 2021 6:54 PM GMT)

இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கு அதிகமானோரை பாதித்தாலும் கொரோனா பரவல் வேகம் குறைகிறது.

கொரோனா வேகம் குறைகிறது
இந்தியாவில் கடந்த வாரம் தினமும் கொரோனா பரவல் புதிய உச்சத்தைத் தொடர்ந்து தொட்டு வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் பரவல் வேகம் குறைந்து கொண்டே வந்திருப்பதை பார்க்க முடிகிறது.

* கடந்த 22-ந் தேதி முதல் முறையாக தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது. 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 என பதிவானது. 21-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் 22-ந் தேதி 19 ஆயிரத்து 794 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

* 23-ந் தேதி 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. 22-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 17 ஆயிரத்து 895 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

* 24-ந் தேதி 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 23-ந் தேதியுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 14 ஆயிரத்து 56 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

* 25-ந் தேதி (நேற்று) 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கியது. இது நேற்று முன்தினத்துடன் (24-ந் தேதி) ஒப்பிடுகையில் 2,905 பேருக்கு மட்டுமே கூடுதலாக பாதித்துள்ளது.

அதாவது கடந்த 24-ந் தேதியில் இருந்து தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, ஒவ்வொரு நாளும் பரவல் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. (19 ஆயிரத்து 794, 17 ஆயிரத்து 895, 14 ஆயிரத்து 56, 2,905 என ஒவ்வொரு நாளும் குறைந்துள்ளது). இது ஒரு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.இதுவரை இந்தியாவில் தொற்று பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 ஆக உள்ளது.

2,767 பேர் பலி
கொரோனா பலி நேற்று சற்றே அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 2,624 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 2,767 ஆக உயர்ந்தது.இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மராட்டியத்தில் மட்டுமே 676 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். டெல்லியில் 357 பேர், உத்தரபிரதேசத்தில் 222 பேர், சத்தீஷ்காரில் 218 பேர், கர்நாடகத்தில் 208 பேர், குஜராத்தில் 152 பேர், ஜார்கண்டில் 110 பேர், மத்திய பிரதேசத்தில் 104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இருப்பினும் அருணாசலபிரதேசம், தத்ராநகர் 
ஹவேலி டாமன்தியு, லட்சத்தீவு, சிக்கிம், திரிபுரா ஆகிய 5 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்புக்கு நேற்று தப்பி உள்ளன. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.13 சதவீதமாக குறைந்துள்ளது.

2.17 லட்சம் பேர் மீட்பு
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.மராட்டிய மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக 63 ஆயிரத்து 818 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.கொரோனா மீட்பு விகிதம், 83.05 சதவீதம் ஆகும்.

26.82 லட்சம் பேர் சிகிச்சை
இந்தியாவில் நேற்று புதிதாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 811 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் கொரோனா மீட்பு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.இது மொத்த பாதிப்பில் 15.82 சதவீதம் ஆகும்.கொரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு நாளில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 27 கோடியே 79 லட்சத்து 18 ஆயிரத்து 810 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது.

கட்டுக்குள் வரும்...
இந்தியாவில் அனைவரும் முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, கொரோனா கால சுகாதார நெறிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடித்து வருகிறபோது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விடும் என்று சுகாதார நிபுணர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

Next Story