தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தட்டுப்பாடு எதிரொலி; 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் சிக்கல் - தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் போதிய அளவுக்கு கையிருப்பு இல்லை என்று அறிவிப்பு + "||" + Echoes of scarcity across the country; Problems with corona vaccination for people over 18 - Notice that states including Tamil Nadu and Karnataka do not have sufficient stocks

நாடு முழுவதும் தட்டுப்பாடு எதிரொலி; 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் சிக்கல் - தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் போதிய அளவுக்கு கையிருப்பு இல்லை என்று அறிவிப்பு

நாடு முழுவதும் தட்டுப்பாடு எதிரொலி; 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் சிக்கல் - தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் போதிய அளவுக்கு கையிருப்பு இல்லை என்று அறிவிப்பு
நாடு முழுவதும் தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கையிருப்பு இல்லை என்று அறிவித்துள்ளன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது, காட்டுத்தீ போல கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் இந்த இரண்டாவது அலையானது, இளம் வயதினரை அதிகளவில் குறிவைத்து தாக்குகிறது.

இதையடுத்து 18 வயதான அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என மத்திய அரசு சமீபத்தில்அறிவித்தது. அத்துடன் இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மே 1-ந் தேதி (இன்று) தொடங்கும் என்றும் கூறியது.

தடுப்பூசியின் 3-வது கட்டமாக 18 வயதானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு வருவதை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏப்ரல் 28-ந் தேதி முதல் ‘கோவின்’ தளத்திலோ, ‘ஆரோக்கிய சேது’ செயலியிலோ சென்று முன்பதிவு செய்து, தடுப்பூசி போடுவதற்கு நேரம் ஒதுக்கிப்பெற வேண்டும் என்றும் அறிவித்தது.

அதன்படி, நாடெங்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இளம் வயதினர் போட்டி போட்டுக்கொண்டு 28-ந் தேதி முதல் பதிவு செய்யத்தொடங்கினர்.

28-ந் தேதியன்று 1.37 கோடி பேர் பதிவு செய்தனர். 29-ந் தேதி இறுதிக்குள் 1.04 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.

நேற்று காலை வரையில் நாடு முழுவதும் 2.45 கோடி பேர், 3-வது கட்ட திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், மே 1-ந் தேதி முதல் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக முதல் கட்டமாக 1.5 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று நாடு முழுவதும் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழகம், டெல்லி, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு போதிய அளவில் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையொட்டி தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஏற்கனவே 1.5 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இதுவரை புனே, ஐதராபாத்தில் உள்ள நிறுவனங்களில் இருந்து எப்போது தடுப்பூசி முழுவதும் பெறப்படும் என்ற தகவல் வரவில்லை. அது வந்த பிறகுதான் மற்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். இதேபோல் தான் மற்ற மாநிலங்களும் காத்திருக்கின்றன.

தமிழகம் 1.5 கோடி தடுப்பூசி ஆர்டர் செய்திருந்தாலும் கூட, மத்திய அரசு குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. அந்த குறிப்பிட்ட அளவிலான தடுப்பூசிகளும் எப்பொழுது வரும் என தெரியவில்லை. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்காக மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

இதுவரை சுமார் 68 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. சுமார் 57 லட்சம் தடுப்பூசிகள் செலவழித்துள்ளோம். மீதமுள்ள தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இன்று (மே 1-ந் தேதி) போடவேண்டும் என்றால், மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் கைக்கு வந்தால்தான் போடமுடியும். தடுப்பூசி எப்பொழுது வரும் என்ற தகவல் இதுவரை பெறப்படவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த்கெஜ்ரிவால் நேற்று காணொலி காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “டெல்லி அரசுக்கு வரவேண்டிய தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை. அதுகுறித்து, தடுப்பூசி நிறுவனத்துடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விரைவில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். முதலில் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நாளையோ (இன்று) அல்லது நாளை மறுதினமோ (நாளை) வரும். தடுப்பூசிகள் வந்தவுடன் அது குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும். தடுப்பூசிக்கு பதிவு செய்துகொண்டவர்கள், அதன்பிறகு தடுப்பூசி மையங்களுக்கு வரத்தொடங்கலாம்” என கூறினார்.

கர்நாடக மாநில சுகாதார மந்திரி கே.சுதாகர் கூறும்போது, “நாங்கள் ஒரு கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். ஆனால் அவற்றை எப்போது வழங்குவார்கள் என்பது குறித்து தடுப்பூசி நிறுவனங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. எனவே நீங்கள் (18 வயதானவர்கள்) கோவின் தளத்தில் பதிவு செய்திருந்தாலும் தயவு செய்து தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம்” என குறிப்பிட்டார்.

கர்நாடகத்தில் இந்த வயது பிரிவினர் 3.5 கோடி பேர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அருணாசல பிரதேச மாநிலத்திலும் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடுவது, தொழில்நுட்ப காரணங்களையொட்டி அடுத்த உத்தரவு பிறப்பிக்கிற வரையில் ஒத்தி போடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் தடுப்பூசி சப்ளை வந்து சேர்ந்த பின்னர் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று சுகாதார துறை ஆணையர் அடல் டல்லூ தெரிவித்தார்.

பஞ்சாப்பில் போதிய அளவு தடுப்பூசி இருப்பு இல்லை என்பதால் 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவது தாமதம் ஆகும் என்று அந்த மாநில சுகாதார மந்திரி பல்பீர் சிங் சித்து அறிவித்தார்.

தெலுங்கானா மாநிலத்தில், தடுப்பூசி நிறுவனங்களுடன் மாநில அரசு தொடர்பில் இருந்தாலும், தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும் என்பதில் உறுதியற்ற நிலை உள்ளதாக மாநில பொது சுகாதார இயக்குனர் சீனிவாசராவ் தெரிவித்தார். அந்த மாநிலத்துக்கு 4 கோடி டோஸ் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர மாநிலத்திலும் தடுப்பூசி கொள்முதல் தாமதம் ஆகி உள்ளதால் திட்டமிட்டபடி இன்று 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவது இன்று தொடங்காது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதையொட்டி முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அலுவலகம் விடுத்த அறிக்கையில், தடுப்பூசிகள் கையிருப்பின்படி, நாட்டில் 18-44 வயதினருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டு முடிப்பது என்பது அடுத்த ஜனவரி வரையில் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் 1.5 கோடிபேருக்கு தடுப்பூசி போட 3 கோடி டோஸ் தடுப்பூசிகள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாம். எனவே அங்கும் 18 வயதானோருக்கு இன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படாது என தெரிகிறது.

ஆனால் நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் திட்டமிட்டபடி இன்று 7 மாவட்டங்களில் 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று குஜராத்திலும் இன்று 18 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி, கொரோனாவின் மோசமான தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் தொடங்குவதாக முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சம், “மாநில அரசுகள் வசம் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாளில் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும்” என தெரிவித்தது.

இருப்பினும் 18 வயதானோருக்கு பல மாநிலங்களில் தடுப்பூசி போடுவது இன்று தொடங்காது என்பது, அந்த வயது பிரிவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.