மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்க உச்சநீதிமன்ற கண்காணிப்பில் கமிட்டி; சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்க உச்சநீதிமன்ற கண்காணிப்பில் செயல்படும் கமிட்டி அமைக்க வேண்டும் என சஞ்சய் ராவத் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்ற கமிட்டி
நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்கி வருகிறது. இதேபோல கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்தையும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதில் மராட்டியத்துக்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தநிலையில் மாநிலங்களுக்கு தேவையான ரெம்டெசிவிர், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசியை வழங்க உச்சநீதிமன்ற கண்காணிப்பில் செயல்படும் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பாரபட்சமின்றி செயல்படும்இது குறித்து அவர் கூறியதாவது:-
மராட்டியம் உள்பட பல மாநிலங்களுக்கு தேவையான அளவு தடுப்பு மருந்து டோஸ் கிடைக்கவில்லை. மத்திய அரசு என்ன செய்கிறது?. ெகாரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி மேலாண்மையை உச்சநீதி மன்றம் கையில் எடுக்க வேண்டும். அதற்காக தேசிய அளவில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியால் பாரபட்சம் இன்றி செயல்பட முடியும்.
மாநிலத்தில் நிலவும் பாதிப்பை வைத்து ஆக்சிஜன், ரெம்டெசிவிர், தடுப்பு மருந்தை பிரித்து கொடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.