தேசிய செய்திகள்

புதுவையில் என்.ஆர்.காங்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி; வாக்கு எண்ணிக்கை முடிவில் 16 தொகுதிகளில் வெற்றி + "||" + In Pondicherry, the NRC-BJP Coalition rule; Won 16 constituencies at the end of the vote count

புதுவையில் என்.ஆர்.காங்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி; வாக்கு எண்ணிக்கை முடிவில் 16 தொகுதிகளில் வெற்றி

புதுவையில் என்.ஆர்.காங்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி; வாக்கு எண்ணிக்கை முடிவில் 16 தொகுதிகளில் வெற்றி
புதுவை சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு 8 இடங்களே கிடைத்தன.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.

15-வது சட்டமன்ற தேர்தல்
நாராயணசாமி தலைமையிலான இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவடைய சில நாட்களே இருந்தநிலையில் பதவி இழந்தது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதே ஆட்சி கவிழ்வதற்கு காரணமாகி விட்டது.இதையடுத்து கடந்த (ஏப்ரல்) மாதம் 6-ந்தேதி புதுச்சேரி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடந்தது.புதுச்சேரி -23, காரைக்கால் -5, மாகே -1, ஏனாம் -1 என மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 15-வது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. மற்றொரு அணியாக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து நின்றன.

81.70 சதவீத வாக்குகள் பதிவு
தேர்தலில் 116 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 324 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். 1,578 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 1,677 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,558 கட்டுப்பாட்டு எந்திரங்கள் அதே எண்ணிக்கையில் வி.வி.பாட் எந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன.மொத்தம் உள்ள 10 லட்சத்து 4 ஆயிரத்து 197 வாக்காளர்களில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 490 ஆண்கள், 4 லட்சத்து 36 ஆயிரத்து 867 பெண்கள் என 8 லட்சத்து 20 ஆயிரத்து 446 பேர் வாக்களித்தனர். இதன் அடிப்படையில் மொத்தம் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின.இதற்கான 
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும், காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள மையங்களிலும் 
கொண்டு போய் வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை
இந்த 6 மையங்களிலும் நேற்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.வாக்கு எண்ணும் பணியில் 1,400 பேரும், வேட்பாளர்களின் ஏஜெண்டுகளும், பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் ஈடுபட்டனர். 8 தொகுதிகள் வீதம் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.

நமச்சிவாயம் வெற்றி
முதலில் மண்ணாடிப்பட்டு, மங்களம், கதிர்காமம், காமராஜ் நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம் ஆகிய 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடந்தது. பின்னர் ஒரு தொகுதிக்கு 5 வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதே நேரத்தில் காரைக்கால் வடக்கு, நெடுங்காடு, மாகி, ஏனாம் ஆகிய 4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.இதில் உப்பளம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனிபால் கென்னடி வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் தோல்வியை தழுவினார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர்களில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார், நெல்லித்தோப்பு தொகுதியில் ரிச்சர்ட்ஸ், மணவெளி தொகுதியில் ஏம்பலம் செல்வம், ஊசுடு தொகுதியில் சாய் 
சரவணகுமார், காலாப்பட்டு தொகுதியில் கல்யாண சுந்தரம் ஆகியோர் வென்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ்
என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி (தட்டாஞ்சாவடி), கே.எஸ்.பி.ரமேஷ் (கதிர்காமம்), தேனீ.ஜெயக்குமார் (மங்கலம்), திருமுருகன் (காரைக்கால் வடக்கு), சந்திரபிரியங்கா (நெடுங்காடு), பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி (அரியாங்குப்பம்), ஏ.கே.டி.ஆறுமுகம் (இந்திராநகர்), ராஜவேலு (நெட்டப்பாக்கம்), லட்சுமி நாராயணன் (ராஜ்பவன்), லட்சுமிகாந்தன்(ஏம்பலம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காங்கிரஸ், தி.மு.க.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு லாஸ்பேட்டை தொகுதியில் வைத்தியநாதன். மாகியில் ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சிவா (வில்லியனூர்), அனிபால் கென்னடி (உப்பளம்) நாஜிம் (காரைக்கால் தெற்கு), செந்தில்குமார் (பாகூர்), சம்பத்(முதலியார்பேட்டை), நாக தியாகராஜன் (நிரவி- திருபட்டினம்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சுயேச்சைகளாக போட்டியிட்ட நேரு என்ற குப்புசாமி (உருளையன்பேட்டை), பி.ஆர்.சிவா (திருநள்ளாறு), அங்காளன் (திருபுவனை), பிரகாஷ்குமார் (முத்தியால்பேட்டை) கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் (ஏனாம்), சிவசங்கர் (உழவர்கரை) ஆகிய 6 பேர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள்
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 16 இடங்களிலும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சுயேச்சைகளாக வெற்றி பெற்ற 6 பேரில் ஏனாம், உழவர்கரை தொகுதிகள் தவிர மற்ற 4பேரும் என்.ஆர்.காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் ஆவார்கள். இவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 4-வது முறையாக ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி
புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. ஒரு இடம் கூட கிடைக்காததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
2. புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்
புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது.
3. புதுவையில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை; ஊரடங்கு கட்டுப்பாடுகள் 3-ந்தேதி வரை நீட்டிப்பு; மதுக்கடைகளும் மூடப்படும்
புதுச்சேரியில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை விதிப்பதுடன், வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும். மதுக்கடைகளும் மூடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
4. புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் அறிவித்துள்ளார்.
5. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்; வர்த்தக நிறுவனங்கள் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வர்த்தக நிறுவனங்கள், மூடப்பட்டன. விதிகளை மீறியவர்களிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர்.