புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்; என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உறுதி


புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்; என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உறுதி
x
தினத்தந்தி 4 May 2021 4:54 AM IST (Updated: 4 May 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார்.

நம்பிக்கை

சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ஏனாம் தொகுதியில் தோல்வியடைந்தார்.தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் தனது வெற்றி சான்றிதழை, வி.வி.பி.நகரில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முகமது மன்சூரிடம் பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்களை அப்பா பைத்தியசாமி சாமி முன்பு வைத்து வழிபட்டனர். மேலும் வெற்றி வேட்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், ராஜவேலு, ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி.ரமே‌‌ஷ், திருமுருகன், சந்திரபிரியங்கா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அறிக்கை

தேர்தலில் வெற்றியை தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பேராதரவு தந்து வெற்றிபெற செய்த புதுவை மாநில வாக்காள பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுவை மக்களின் அபரிதமான நம்பிக்கையை பெற்றுள்ள நாங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து கொடுப்போம். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.

வளர்ச்சி பாதையில்...

முதற்காரியமாக தற்போது ஒரு பெருஞ்சிக்கலாக உருவெடுத்துள்ள கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம். புதுச்சேரியை புதிய வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story