மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 9 பேர் சாவு; வீடுகள் சூறை; அமைதியை நிலைநாட்ட கவர்னர் வலியுறுத்தல்


மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 9 பேர் சாவு; வீடுகள் சூறை; அமைதியை நிலைநாட்ட கவர்னர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 May 2021 6:58 PM GMT (Updated: 4 May 2021 6:58 PM GMT)

மேற்கு வங்காளத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு பிந்தைய வன்முறையில் 9 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. அமைதியை நிலைநாட்டுமாறு கவர்னர் வலியுறுத்தி உள்ளார்.

கவர்னரிடம் முறையீடு

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன், மேற்கு வங்காளம் முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ், கவர்னர் ஜெகதீப் தாங்கரை சந்தித்து முறையிட்டார். வன்முறை சம்பவங்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் ஓடி ஒளிவதாகவும் அவர் கூறினார்.

தடுக்க வேண்டும்

இதையடுத்து, வன்முறையை தடுத்து நிறுத்துமாறு மாநில அரசை கவர்னர் தாங்கர் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளத்தில் மட்டும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடப்பது ஏன்? வன்முறை, அராஜகம், கொலை, அச்சுறுத்தல் ஆகியவை ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடு. ஆகவே, இந்த அரசியல் வன்முறைகளை டி.ஜி.பி.யும், கொல்கத்தா போலீஸ் கமிஷனரும் தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் சட்ட மரபுகளை நசுக்கும் இத்தகைய செயல்களை ஏற்க முடியாது. மாநில அரசு இதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.

உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வன்முறை தொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. இதற்கிடையே, மம்தா அரசின் தூண்டுதலுடன் வன்முறை நடப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறியதாவது:-

ஒரு ஜனநாயக கட்சிக்கு ஓட்டு போடுவது குற்றமா? அதற்காக மக்களை வீடு புகுந்து தாக்குகிறார்கள். மம்தா அரசின் தூண்டுதலுடன் இந்த வன்முறை நடந்து வருகிறது. பா.ஜனதா தொண்டரின் தாய் என்ற ஒரே காரணத்துக்காக 80 வயது மூதாட்டி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தெரு நாய்களை பாதுகாக்கும் அஜித் சர்கார் என்ற பா.ஜனதா ஆதரவாளரும் கொல்லப்பட்டுள்ளார்.

ஜே.பி.நட்டா சந்திப்பார்

ஹிட்லரின் நாஜிப்படை இனப்படுகொலையில் ஈடுபட்டதைப் போல் இதை செய்து வருகிறார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு இதை கண்டிக்க வேண்டும். பிரசாரத்தின்போது, மம்தா பானர்ஜி பேசிய ஆத்திரமூட்டும் பேச்சுகள்தான் இதற்கு காரணம்.

பாதிக்கப்பட்ட மக்களை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து பேசுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story