கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 9 May 2021 9:36 AM GMT (Updated: 9 May 2021 9:36 AM GMT)

கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றன. அதேநேரம் மாநிலங்களின் பாதிப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் பிரதமர் மோடி, தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அறிவுறுத்தி வருகிறார்.

இதற்காக முதல்-மந்திரிகள் கூட்டத்தை நடத்தி வந்த அவர் தற்போது ஒவ்வொரு முதல்-மந்திரியையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் பஞ்சாப், பீகார், கர்நாடகா, உத்தரகாண்ட் ஆகிய மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேசினார்.  அப்போது மாநிலங்களின் பாதிப்பு நிலவரம், தடுப்பூசி பணிகளின் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகள் எடுத்துரைத்தனர்.

முன்னதாக நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் ஆகியோரை  தனித்தனியாக தொடர்பு கொண்டு  பிரதமர் மோடி பேசியிருந்தார். 


Next Story