கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது


கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது
x
தினத்தந்தி 12 May 2021 7:10 PM GMT (Updated: 13 May 2021 4:39 AM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. இதற்கான மருந்து உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது.

இந்த தருணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகிற நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும்.

இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான்.

கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஸ்டீராய்டுகளைப் பொறுத்தமட்டில், அவை கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து,கொரோனாவை எதிர்த்துப்போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகிற சில சேதங்களை தடுக்கின்றன. ஆனால் அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன.

நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்ததும் இதற்கான மருந்து தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இது குறித்து மத்திய உரம் மற்றும் ரசாயனங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவுக்கு பிந்தைய சிக்கலாக மியூகோர்மைகோசிஸ் என்கிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குகிறது. இதற்கு ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த மருந்துக்கான தேவை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

எனவே இந்த மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உற்பத்தியாளர்களுடன் பேசி வருகிறது. இந்த மருந்தின் கூடுதல் இறக்குமதிகள் மற்றும் உள்நாட்டில் இதன் உற்பத்தி அதிகரிப்பு மூலம் வினியோக நிலை மேம்படும்.

உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடம் இந்த மருந்து கையிருப்பு நிலையையும், தேவையையும் மத்திய அரசு ஆராய்ந்து, அதன் தொடர்ச்சியாக வரும் 31-ந் தேதி வரையில் இந்த மருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கிடைக்க ஒதுக்கி உள்ளது.

இந்த மருந்தை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் இடையே சம அளவில் வினியோகிப்பதற்கான ஒரு வழிமுறையை வைத்திருக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மருந்து பெறுவதற்கு தொடர்பு புள்ளி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இந்த மருந்தை நியாயமான விதத்தில் பயன்படுத்துவதற்கு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த மருந்து வினியோகத்தை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கண்காணிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story